திரையுலக பயணத்தில் ஒரு அறிமுக இயக்குநராக அதிக சவாலான புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹீரோவாக என்னுடைய பயணம் 25 வருடங்களுக்கு பிறகு இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது. என்னுடைய கனவு, ஆசை, வாழக்கையில் நான் என்னவாக இருக்கப்போகிறேன் என்கிற என்னுடைய முதல் எண்ணம் எல்லாமே நிஜமாகி இருக்கிறது. ஆம்.., எனது திரையுலக பயணத்தில் ஒரு அறிமுக இயக்குநராக அதிக சவாலான புதிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்,
அந்தவகையில் தற்போது நான் முதன்முதலாக இயக்கும் துப்பறிவாளன் 2 படத்திற்காக லண்டன், அசர்பைஜான் மற்றும் மால்டாஆகிய இடங்களுக்கு கிளம்புகிறோம்.விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றாலும் என் தந்தை திரு. ஜி.கே ரெட்டி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் சார் சொன்னதுபோல கடுமையான உழைப்பு ஒருபோதும் வீணாகாது. எதுவந்தாலும் பரவயில்லை என உங்கள் கனவுகளை விடாமுயற்சியுடன் தொடரும்போது ஒருநாள் அது நிஜமாக மாறும்.
இந்த நேரத்தில் எனது தந்தைக்கு நன்றி கூறி கொள்கிறேன். அதே போல் எனது குரு ஆக்ஷன் கிங் அர்ஜுன் சாருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். டைரக்டராக உங்கள் பேரை காப்பாத்துவேன். ஒரு நடிகர் என்கிற இந்த அடையாளத்தை தந்த அனைவருக்கும் நன்றி. #துப்பறிவாளன்2 வுக்கும் ஒரு இயக்குநராகவும் உங்களது ஆதரவு தொடரும் என நம்புகிறேன்.. எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு நன்றி.
கவலைப்படாதீர்கள்.. நிஜ வாழவிலோ அல்லது சினிமா வாழக்கையிலோ நான் யாருடைய குழந்தையையும் ஒருபோதும் கைவிடமாட்டேன். அதேபோல் உங்கள் குழந்தையான துப்பறிவாளன்2 வை தத்தடுத்த நான், அதை உங்கள் இலக்கை எட்டும் விதமாக செய்வேன் சார். கடவுளின் ஆசீர்வாதம்.. இப்போது வேலைக்கு கிளம்புகிறேன்” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
விஷாலின் சினிமா வாழ்க்கை
பிரபல தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இளைய மகனான விஷால், நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கிய செல்லமே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களால் புரட்சி தளபதி என அன்போடு அழைக்கப்பட்டார். ஹீரோ, தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்ட விஷால் துப்பறிவாளன் படத்தின் 2 ஆம் பாகத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் முதல் பாகத்தை இயக்குநர் மிஷ்கின் எடுத்த நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இரண்டாம் பாகம் ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் விஷால், மிஷ்கின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் தயாரிப்பாளரான விஷால் மிஷ்கினை நீக்கி தானே படத்தை இயக்குவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.