தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். விஷாலுக்கு இன்று 47 வயதாகிறது. இதையடுத்து, சென்னையில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பிறகு விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, 


தமிழிலும் ஹேமா கமிட்டி:

"மலையாள திரையுலகில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திய ஹேமா கமிஷன் போலவே தமிழிலும் ஒரு குழு அமைக்கப்படும்.  தமிழ் திரையுலகில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை என்றாலும், நடிகைகள் யாராவது புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஹேமா கமிட்டி போல குழு அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உப்புமா கம்பெனிகளால் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது. எந்த பிரபலமாக இருந்தாலும் தண்டனையை அனுபவிக்க வேண்டும். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுவோரை செருப்பால் அடிக்க வேண்டும்" என்று விஷால் தெரிவித்துள்ளார்.


மலையாள திரையுலகை அதிர வைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்:


தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திரையுலகமாக மலையாள திரையுலகம் திகழ்கிறது. அந்த திரையுலகில் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக அந்த மாநில அரசு ஹேமா கமிட்டி அமைத்தது. ஹேமா கமிட்டி அளித்த புகாரில் மலையாள திரையுலகின் பிரபல நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், சித்திக் என பலர் மீதும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகிறது.


மலையாள திரையுலகையே அதிரவைத்துள்ள இந்த விவகாரத்தில் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், விரைவில் மலையாள திரையுலகின் பிரபல நடிகர்கள், கலைஞர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மற்ற திரையுலகங்களிலும் கோரிக்கை:


தமிழ் சினிமாவிலும் நடிகைகள், துணை நடிகர்கள் சில நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர். ஆனால், அந்த குற்றச்சாட்டுக்களின் மீது பெரியளவில் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல மற்ற திரையுலகத்தினரும் அந்தந்த திரையுலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை களைய குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.