மகுடம் படத்தை எடுப்பதில் ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் ரொம்ப கடினமாக இருந்தது என விஷால் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் படம் மகுடம். இந்த படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இதனிடையே மகுடம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

வருங்கால மனைவிக்கு நன்றி

இதில் பேசிய நடிகர், இயக்குநர் விஷால், “ஒவ்வொரு பிரபலத்துக்கும் அவர்களின் கேரியரில் இக்கட்டான சூழல் ஏற்படும். இத்தோடு இவர்கள் கேரியர் முடிந்தது என நினைக்கும் நிலை வரும். அப்படித்தான் சில பேரால் நான் நடிக்க முடியாமல் 14 மாதங்கள் முடங்கினேன். அது யார் என சொல்ல விரும்பவில்லை. ஒரு வருடம் என் தனிப்பட்ட வாழ்க்கை வெகுவாக பாதித்தாலும், இன்றைக்கு நான் இந்த இடத்தில் இருக்க காரணம் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா தான். அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

Continues below advertisement

வேறு யாராக இருந்தாலும் பிச்சிக்கிட்டு ஓடியிருப்பார்கள். திருப்பூர் சுப்பிரமணியம் கொடுத்த நம்பிக்கை,ஊக்கம் காரணமாக இந்த படத்தை நன்றாக கொண்டு வர வேண்டும் என நினைக்க வைத்தது. அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். மகுடம் படத்தின் வெற்றிக்கு அவர் மிக முக்கிய காரணமாகும். 

இது எனக்கு ரொம்ப சவாலான படம். அது இயக்குநராகவும், நடிகராகவும் ரொம்ப கடினமாக இருந்தது. படத்தில் நடித்த யாரும் நான் சொன்ன அறிவுரைகளை மறுக்காமல் கேட்டு செயல்பட்டனர். ஈகோ இல்லாத இந்த அணியால் தான் படம் சிறப்பாக வந்துள்ளது. படம் இயக்க வேண்டும் என்பது என் 35 வருட கனவாகும். 

அர்ஜூனிடம் உதவி இயக்குநராக சேர நான்கரை மணி காத்திருந்து என் அப்பா உதவினார். அர்ஜூன் தான் என்னை நடிக்க வைத்தார். போட்டோஷூட் செய்து நடிகராக அறிமுகம் செய்தார்” என கூறினார்.

கிளப்பில் நடந்த கூத்து 

தொடர்ந்து நடிகர் ஜான் விஜய் பற்றி பேசும்போது, “அவர் எனக்கு காலேஜ் சீனியர். ஆனால் பெரிய அளவில் தொடர்பு கிடையாது. லயோலா கல்லூரியில் படிக்கும்போது அவரால் ஒரு பெரிய சாதி கலவரமே நடந்தது. அவரை மகுடம் படத்தில் நடிக்க அழைத்தேன். ஜான் விஜய் சிறப்பாக நடிப்பார். தேவைக்கு அதிகமாகவே தருவார். 

நானும், உதயநிதியும் ஒருநாள் கிளப்புக்கு சென்றோம். தங்களுடன் பெண் இருந்தால்  அந்த கிளப்பிற்குள் ஆண்களை உள்ளே விடுவார்கள். பள்ளி தான் படித்துக் கொண்டிருந்தோம். அப்போது லுங்கி, கண்ணாடி போட்டுக் கொண்டு தள்ளுடா என அங்கிருந்தவர்களை மிரட்டி தனியாளாக ஒருவர் செல்கிறார். யாருடா இது என பார்த்தால் ஜான் விஜய். அப்போது பார்த்த மாதிரி இப்போதும் உள்ளார். அதைத்தான் மகுடம் படத்தில் பயன்படுத்தி உள்ளோம் என விஷால் தெரிவித்தார்.