வெளிநாட்டில் நடிகர் விஷால் இளம் பெண்ணுடன் ஊர் சுற்றியது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார். 


செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விஷால். “புரட்சி தளபதி” என்ற அடைமொழியோடு ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமையை வெளிப்படுத்திய விஷால் அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைக்கிறார்.


கடைசியாக விஷால் நடிப்பில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் மார்க் ஆண்டனி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு கம்பேக் என சொல்லும் அளவுக்கு தொடர் தோல்விகளுக்கு அப்படம் முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் விஷாலின் கேரியரில் ரூபாய் 100 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை மார்க் ஆண்டனி பெற்றது. இதனால் உற்சாகமடைந்த விஷால் அடுத்தடுத்து படங்கள் வெற்றி பெற வேண்டும் என கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். 


தற்போது இயக்குனர் ஹரியுடன் மூன்றாவது முறையாக அவர் இணைந்து பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் சங்கத்தில் செயலாளர் பொறுப்பில் இருக்கும் விஷால் 44 வயதான போதிலும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இடையிடையே நடிகைகளுடன் விஷால் காதல் என்ற கிசுகிசுக்களும் ரெக்கை கட்டி பறக்கின்றது. ஒருமுறை நிச்சயதார்த்தம் வரை சென்ற விஷால் தனிப்பட்ட காரணங்களாக திருமணத்தை நிறுத்தி விட்டார். 






இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இளம்பெண் ஒருவருடன் விஷால் வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலானது. இது பழைய வீடியோவா, இல்லை மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவா என பல கேள்விகள் எழுந்தன. அதில் தன்னை வீடியோ எடுப்பதை கண்டதும் விஷால் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம் பிடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் அவரைப் பற்றி பல வகையான வதந்திகள் பரவ தொடங்கியது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் விளக்கம் அளித்துள்ளார். 


இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள விஷால், “மன்னிக்கவும் நண்பர்களே சமீபத்திய வீடியோவைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது என நான் நினைக்கிறேன். ஆம் அந்த வீடியோவில் சொன்னபடி நான் நியூயார்க்கில் இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் எனது உறவினர்களுடன் மன அமைதிக்காக இங்கு வருவது வழக்கம். இதனை ஒரு வழக்கமாகவே பின்பற்றி வருகிறேன். 


அப்படித்தான் கிறிஸ்துமஸ் தினத்தன்று என்னுடைய உறவினர்கள் என்னை வைத்து பிராங்க் செய்ய முடிவு செய்து, அவர்களால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் அது. பொதுவாகவே எனக்குள் எப்போதும் இருக்கும் குழந்தைத்தனத்தை வெளிக்கொண்டு வருவது நல்ல உணர்வை ஏற்படுத்தும். அதனால்தான் அப்படி செய்தேன். அத்துடன் உங்களின் அனைத்து ஊகங்களுக்கும் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன். இதை காரணமாக வைத்து சிலர்  என்னை டார்கெட் செய்ய முயன்றனர். ஆனால் அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. லவ் யூ ஆல்!” என பதிவிட்டுள்ளார்.