மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை, நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
விஷால் டிவிட்டர் பதிவு:
தனது நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான அறிவிப்பை நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “மார்க் ஆண்டனி படத்தில் தனக்கான மற்றும் தெலுங்கு நடிகர் சுனிலின் பணிகள் முடிவடைந்துவிட்டன. இது ஒரு அழகான பயணம் மற்றும் அருமையான அனுபவம். நன்றிகள் ஆதிக் ரவிச்சந்திரன். படம் திரைக்கு வருவதை காண மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மார்க் ஆண்டனி வெளியீடு:
அதோடு இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், விஷால் மற்றும் சுனில் ஆகியோர் கேக் வெட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர்களுடன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினரும் உள்ளனர். இதனிடையே, மார்க் ஆண்டனி படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு, திரைப்படம் வரும் ஜுலை 28ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
மார்க் ஆண்டனியாக விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி” படத்தில் விஷால் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக ரித்து வர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு கடந்தாண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியானது.
ஷூட்டிங்கில் நடந்த விபத்து
முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்து நிகழ்ந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் கடந்த பிப்ரவரி மாதம் ஷூட்டிங் நடந்தது. அப்போது ஆக்ஷன் காட்சி ஒன்றில் பயன்படுத்திய லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து செட்டில் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விபத்திலிருந்து நூலிழையில் தப்பியதாக விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவருமே ட்விட்டரில் தெரிவித்ததோடு, கடவுளுக்கு நன்றி எனவும் கூறியிருந்தனர்.
மார்க் ஆண்டனி பட டீசர் :
அதைதொடர்ந்து கடந்த மாதம், மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியானது. போன் வழியாக காலத்தை கடந்து செல்லும் டைம் டிராவல் நிகழ்வுகள் இதில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது என்பது டீசரில் வெளியான காட்சிகள் மூலம் தெரிய வருகிறது. இதில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷால் ஆகியோரின் நடிப்பு நல்ல பாராட்டை பெற்றுள்ளது.