நடிகர் விஷால் செய்ய முயற்சித்ததை, முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து முடித்தார்!
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட விஷால் தான் வெற்றிபெற்றால் ஆர் கே நகரில் உள்ள மதுபானக்கடைகளை மூடுவதாக கூறியிருந்தார்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஷால், நடிகர் சங்கத்தை வழி நடத்தும் பெரும் பணியை மேற்கொண்டு வருவது போல், தமிழக அரசியலிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். நடிகர்கள் அரசியலில் நுழைய யோசித்த அல்லது பயந்த காலத்திலேயே தைரியமாக தமிழக அரசியல் களத்தில் பயணித்த விஷால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார்.
தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு தன் வாழ்த்தை தெரிவித்துள்ள நடிகர் விஷால், விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 717 மதுக்கடைகளை உடனடியாக மூடுவதற்கான உத்தரவை வரவேற்றுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையை நடிகர் விஷால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட போதே செய்ய நினைத்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட விஷால், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கல்லூரி மாணவி ஒருவர் அவரை சந்தித்து, தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூட வேண்டும், என்ற கோரிக்கையை வைத்தார். தான் தேர்தலில் வெற்றி பெற்று, இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உடன் அந்த டாஸ்மாக் கடையை நிச்சயம் மூடுவேன், என்று விஷால் அந்த மாணவிக்கு உறுதியளித்தார்.
ஆனால், அந்த தேர்தலின் முடிவு விஷாலுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும், அந்த மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். குறிப்பாக, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை, அந்த தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனிடம் எடுத்துச் செல்வதற்காக, அப்பகுதி மக்களின் கையெழுத்து பெற்ற கோரிக்கை மனுவையும், அந்த டாஸ்மாக் கடை மூடப்பட வேண்டிய அவசியத்தையும் நடிகர் விஷால் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அப்போதைய ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனிடமும் கடிதம் மூலம் எடுத்துரைத்தார். அதே போல், தமிழ் நாடு முழுவதும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக் கடைகளையும் மூட வழி வகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் 717 மதுக்கடைகளில் ஆர்.கே.நகர் தொகுதியில், விஷால் மூட நினைத்த மதுக்கடையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அன்றே நடிகர் விஷால் செய்ய நினைத்ததை, இன்று முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஜோசப் விஜய் செய்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை வரவேற்று பாராட்டியுள்ள நடிகர் விஷால், மாணவியின் கோரிக்கையும், தனது பல வருட முயற்சியும் இன்று நிறைவேறியிருப்பதால், முதலமைச்சர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















