சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்து கவனமீர்த்தவர் நடிகர் வின்சண்ட் ராய் . இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் நெல்சன் திலிப்குமாரின் தந்தை சாம்சன் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
நடிகர் வின்சென்ட் ராய் தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து அறியப்பட்டவர். 1990ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் திரைப்படத்தில் மணிபாரதி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து தலைவாசல், புதல்வன், கடவுள், உளவுத்துறை, உல்லாசம், தமிழன், ஸ்ரீ, முத்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜயகாந்துடன் சத்ரியன், ஏழை ஜாதி உள்ளிட்ட ஏழு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். திரைத்துறையில் நீண்டகாலமாகப் பயணித்து வரும் இவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
நெல்சனின் தந்தை சாம்சன் யார் ?
தனது திரைப்பயணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் வின்சண்ட் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது இயக்குநர் நெல்சன் திலிப்குமாரின் தந்தை சாம்சன் குறித்து அவர் பேசினார்.
"சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிதான் வந்தேன். ஆனால் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் தான் ராம்சே என்கிற இயக்குநரிடம் உதவி இயக்குநராக வேலைப் பார்த்தேன். தொடர்ந்து சாந்தோம் கலை தொடர்பு நிலையத்தில் சுமார் 600 ரேடியோ நாடகங்களை எழுதி இருக்கிறேன். எனக்கும் சீனியராக சாம்சன் இருந்தார். சுமார் 1200 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். அந்த சாம்சனின் மகன் தான் இன்று இயக்குநராக இருக்கும் நெல்சன். அவர் எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர். இன்று நெல்சன் ஒரு வெற்றி இயக்குநராக இருக்கிறார் என்றால் அது அவருடைய மரபில் இருந்து வருவதாக கூட இருக்கலாம். ஏனால் சாம்சன் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தவர். ஒரு அண்ணன் தம்பி சண்டை போடுகிறார்கள் என்று ஒரு கதையை சொன்னால் அது பார்வையாளர்களுக்கு போர் அடிச்சிரும். அதுவே அந்த அண்ணன் தம்பி இடையிலான உறவு காட்டிவிட்டு அதன் பிறகு அவர்கள் சண்டைப் போடுகிறார்கள் என்று காட்டினால் அது ஆடியன்ஸ் கவனத்தை ஈர்க்கும். இதனை எனக்கு சொல்லிக் கொடுத்தவர் சாம்சன் தான். இன்று நெல்சன் இயக்கும் படங்களில் இந்த அம்சம் இருப்பதை நாம் பார்க்கலாம். " என்று தெரிவித்துள்ளார்.
தந்தையைப் போலவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது பயணத்தை தொடங்கியவர் இயக்குநர் நெல்சன். 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதே ஆண்டில் நெல்சனின் தந்தை உடல் நலக் குறைவால் காலமானார். ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியானது. இப்படம் உலகளவில் ரூ 840 கோடி வசூல் செய்து இன்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது.
