90-ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்களில் ஒன்றான சித்தி சீரியலில் நடிகர் விமல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இணையத்தில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கில்லி, கிரீடம், குருவி போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் விமல். இதுபோன்று சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2009-ஆம் வெளியான பசங்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறுவர்களின் பள்ளிப்பருவ வாழ்க்கையை வைத்து பாண்டியராஜ் இயக்கிய ”பசங்க” படத்தில் மீனாட்சி சுந்தரம் என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இப்படத்தில் எதார்த்த நடிப்பில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய இவருக்கு விஜய் அவார்ட்ஸ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து களவாணி படத்தில் நாயகனாக அறிமுகமான விமல், கிராமத்து இளைஞனாக மற்றும் ஊர் பாசையில் நடித்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் ஓவியாவுடனான காதல் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைத்திருந்தது. இதனையடுத்து இப்படம் விமலுக்கு நல்ல என்ட்ரியை சினிமாத்துறையில் கிடைப்பதற்கு வழிவகை செய்தது. இப்படத்தைத் தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம், வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப்பை, உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.
இதோடு கடந்த 2020-ஆம் ஆண்டு கன்னிராசி என்ற படம் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு நல்ல ரீச் கிடைக்காத நிலையில் தொடர்ந்து மார்க்கெட் சரிந்தது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது விலங்கு என்ற வெப் தொடர் வெளியானது. குற்றவாளியை போலீஸ் ஏமாற்றுகிறாரா? இல்லை போலீஸை குற்றவாளி ஏமாற்றுகிறாரா? என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக விமல் இழந்திருந்த மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளது.
இப்படி பல படங்ளில் எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் விமல், மற்ற சில நடிகர்களைப் போலவே சின்னத்திரையின் வாயிலாக வெள்ளித்திரையில் நுழைந்துள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையிலான புகைப்படம் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அதுவும் 90ஸ்கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்.
இப்போதும் கண்ணின் மணி,கண்ணின் மணி நிஜம் கேளம்மா என்ற பாடல் எங்கு ஒழித்தாலும் சித்தி என சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த சீரியல் தான் ராதிகா நடிப்பில் 1999-ஆம் ஆண்டில் வெளியான சித்தி. இந்த பிரபல சீரியலில் விமல் நடித்துள்ள காட்சிகள் தொர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.