விக்ரம்

நடிகர் விக்ரம் நடித்து சமீபத்தில் இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் மற்றொன்று சு அருண்குமார் இயக்கிய வீர தீர சூரன். இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றதுடன் இந்த படங்களில் விக்ரமின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் வெளியான வீர தீர சூரன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மேலும் பரவலான ரசிகர்களை கவர்ந்தது. அடுத்தபடியாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரமின் 63 ஆம் படம் உருவாக இருக்கிறது.

Continues below advertisement

சச்சின் உடன் பயணித்த விக்ரம்

நடிகர் விக்ரமின் பழைய நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் விக்ரம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுடன் விமானத்தில் பயணித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். " விமானத்தில் எல்லாரும் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது சச்சின் வருவதைப் பார்த்ததும் நான் ஓ மை காட் என்று கத்திவிட்டேன். பிறகு என்னை அமைதிபடுத்திக் கொண்டு அவருக்கு ஹாய் சொன்னேன். இந்தியில் ஷாருக் கான் , அபிதாப் பச்சன் ஏன் மோடிக்கே என்னை தெரியும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் சச்சினுக்கு என்னை தெரியவில்லை. யாராவது கையெழுத்து வாங்க வந்தால் கூட நான் நடிகன் என்று அவருக்கு தெரியும் என்று எதிர்பார்த்தேன  நான் ஒரு நடிகன் என்று அவரிடம் சொல்லலாம் என்று ரொம்ப நேரம் யோசித்தேன். பின் நானே போய் நான் ஒரு நடிகன் நிறைய படங்களில் எல்லாம் நடித்திருக்கிறேன் என்று சொன்னேன். பொறுமையாக நான் என்னவெல்லாம் நடித்திருக்கிறேன் என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். கடைசியாக கிளம்பி போகும்போது அவருடன் ஒரு செல்ஃபீ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த தருணத்தை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. அவரிடம் செல்ஃபி கேட்காமல் இருந்தது எனக்கே பெருமையாக இருந்தது." என விக்ரம் தெரிவித்துள்ளார்