நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்துக்குப் பின் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் “தங்கலான்”. இயக்குநர் பா.ரஞ்சித் கைவண்ணத்தில் முழுக்க முழுக்க வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் நிலவுகிறது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் ஷூட்டிங்கானது கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் விக்ரம் பார்க்கவே வித்தியாசமாக காணப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியான நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி படம் ரிலீசாகும் என கூறப்பட்டது, ஆனால் மாதங்கள் செல்கிறதே தவிர தங்கலான் படம் ரிலீசாவதாக தெரியவில்லை. இதனால் காத்திருக்கும் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நடிகர் விக்ரம் பிறந்தநாளன்று விக்ரமின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் புதிய வீடியோ வெளியிடப்பட்டது. இப்படியாக ரிலீஸ் தேதியை அறிவிக்கா விட்டாலும் அவ்வப்போது படக்குழு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.
இப்படியான நிலையில் மக்களவை தேர்தல் முடிவடைந்ததும் தங்கலான் படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தனுஷின் ராயன் ஜூன் 13 ஆம் தேதியும், கல்கி ஏடி 2898 படம் ஜூன் 27 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலே சொன்ன 3 படங்களாலும் தங்கலான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் கடைசி அல்லது ஆகஸ்ட் சுதந்திர விடுமுறைக்கு தங்கலானை வெளியிடலாம் என படக்குழு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.