மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் நடிகர் விக்ரம் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 


1966-ல் பரமக்குடியில் பிறந்த நடிகர் விக்ரம் 1990 என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைந்தார்.அதனைத்தொடர்ந்து நீண்ட காலமாக சினிமாவில் போராடி வந்த விக்ரமிற்கு பாலா இயக்கிய  'சேது' திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காசி, ஜெமினி, சாமி, தில், தூள், பிதாமகன், அருள், அந்நியன், தெய்வத் திருமகள், ராவணன், ஐ ஆகிய படங்கள் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 






நடிகர் மட்டுமல்லாது பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட விக்ரம் திரைக்கதைக்காக எப்படிப்பட்ட ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கக்கூடியவர். விக்ரமின் தந்தை வினோத்ராஜ் மற்றும் மகன் துருவ் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளனர். கடைசியாக மகன் துருவ் உடன் அவர் நடித்த மகான் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. 


இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று மாலை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அப்படத்தில் விக்ரமின் நடித்துள்ள ஆதித்ய கரிகாலன் கேரக்டர் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 






இந்நிலையில் விக்ரம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி கடந்த 2 நாட்களாக கடும் காய்ச்சலில் இருந்த அவர் நேற்று அசாதாரணமாக உணர்ந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பரிசோதனைகள் முடிந்து  மூத்த இதய நிபுணர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விக்ரமுக்கு சிகிச்சை அளித்தனர்.






அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் மருத்துவர்கள் 2 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என கூறியதால் அவர் மருத்துவமனையிலேயே உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் விக்ரமின் மேலாளர் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண