தமிழ் சினிமா கண்டிராத நாயகர்கள் இல்லை. முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் தொடங்கி தற்போதைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை நிறைய நிறைய நாயகர்களை சந்தித்துவிட்டது. சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவர்களில் ஒவ்வொருவரும் தமக்கென திரை வானில் ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியவர்கள் தான். அந்த வகையில் விக்ரம் ஒரு வித்தகர். இன்றும் இளமை மாறாமல், கட்டுமஸ்தான உடல்வாகுடன் சவாலான கதாபாத்திரங்களை மேற்கொண்டு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.


1966 ஏப்ரல் 17 அன்று பிறந்த விக்ரம் இப்போதுள்ள முன்னணி நட்சத்திரங்களில் முக்கியமானவர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த விக்ரமின் இயற்பெயர் ஜான் கென்னடி வினோத் ராஜ். விக்ரமின் தந்தையும் ஒரு துணை நடிகர் தான்.


விக்ரமின் தந்தை வினோத் ராஜ், முன்னான் ராணுவ வீரர், இவர் கன்னடம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். நடனம், பாடல்கள் பாடுவதிலும் இவர் சிறந்தவராக விளங்கியவர். கில்லி, திருப்பாச்சி போன்று நிறைய படங்களில் நடித்துள்ள இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.


ஆரம்ப காலத்தில் விக்ரம் ஒரு மாடலாகத்தான் உலாவந்தார். முதன்முதலில் அவர் இயக்குநர் ஸ்ரீதரால் கதாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீதர் இயக்கிய ‘தந்துவிட்டேன் என்னை’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அவர் நடிப்பில் முதலில் திரைக்கு வந்தது என்னவோ, என் காதல் கண்மணி திரைப்படம்தான். இந்தப் படங்கள் எல்லாமே தோல்வி ரகம் தான்.


தனது திரைப்பயணத்தை ஆயிரமாயிரம் கனவுகளுடன் விக்ரம் தொடங்கினாலும் அவரால் திரையில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள நீண்ட காலம் தேவைப்பட்டது. 90ன் ஆரம்பத்தில் அவரது திரைப்பயணம் 99ல் தான் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளப்படுத்தியது. இடையில் அவர் ஒரு டப்பிங் கலைஞராகக் கூட பணியாற்றியுள்ளார். அஜித்தின் அறிமுகப் படமான ‘அமரவாதி’யில் அவருக்கு டப்பிங் கொடுத்தவர் விக்ரம். அப்பாஸ், பிரபுதேவாவிற்குக்கூட டப்பிங் கொடுத்துள்ளார். 


1999 டிசம்பரில் வெளியான ‘சேது’ விக்ரமுக்கான திருப்புமுனை. பாலா இயக்குநராக அறிமுகமான படமும் அதுதான். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெற்ற வரவேற்பு தமிழ்த் திரையுலகிற்கு இரண்டு பெரிய ஜாம்பவான்களை அடையாளம் காட்டியது. ஒன்று இயக்குநர் பாலா, இன்னொன்று நடிகர் விக்ரம். ’சேது’ படத்தில் ஏர்வாடி மனநல விடுதியில் அடைக்கப்படுபவராக நடிப்பதற்காக 15 கிலோ உடல் எடையைக் குறைத்தார் விக்ரம். அதன் பின்னர் இப்போது வரை உடல் எடை குறைப்பது, பிரத்யேக பாடி லாங்குவேஜ் காட்டுவது என்பதில் கமல்ஹாசனுக்கு நிகரான திறமைசாலிதான் விக்ரம். காசி, சாமி, அந்நியன், ஐ என நிறைய உதாரணங்கள் உண்டு. அப்படியென்றால் கமர்ஷியல் கன்டென்ட்டுக்கு ஒத்துவரமாட்டாரோ என்று தயாரிப்பாளர்களை யோசிக்க வைத்ததே இல்லை விக்ரம். ‘தில்’, ‘தூள்’,‘ஜெமினி’,‘சாமி’ என நிறைய ஹிட்களை கொடுத்தவர் நம் விக்ரம்.


பாலாவின் சேது விக்ரமுக்கு திருப்புமுனை என்றால் அவரின் பிதாமகன் விக்ரமை தேசிய அளவில் அடையாளப்படுத்தி தேசிய விருது பெற்றுக் கொடுத்தது. 2003-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். கமல்ஹாசனுக்குப் பிறகு நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்ற தமிழ்க் கலைஞன் ஆனார். அதனால் தான் அவரது நடிப்பையும், உடல்மொழியையும் ஆங்காங்கே கமல்ஹாசனுடன் ஒப்பிட்டோம்.


எப்போதுமே எல்லாமே ஏறுமுகத்திலேயே இருப்பதில்லை அல்லவா அந்தவகையில் விக்ரமுக்கும் ஒரு சின்ன பிரேக் வந்தது. ஆனால் 2011-ல் வெளியான ‘தெய்வத் திருமகள்' படம் அந்த பிரேக்கை பிரேக் செய்து மீண்டும் ஒரு வேகம் கொடுத்தது. மனவளர்ச்சி குன்றியவராக அவர் நடித்த பாங்கு அவர் மீதான மக்கள் அபிமானத்தை பல மடங்கு அதிகரித்தது. அந்தப் படத்தில் கோட் சீனில் வரும் தந்தை மகள் காட்சியை கண்டு கண் கலங்காதோர் கல் நெஞ்சம் கொண்டவராகத் தான் இருந்திருக்க முடியும். விக்ரமுக்கும் சில அட்டர் ஃப்ளாப் படங்கள் வந்திருக்கின்றன. பத்து எண்றதுக்குள்ள, தாண்டவம், இருமுகன் போன்ற படங்களை இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். கோப்ரா கூட அந்த ரகம் தான். ஆனால் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதாபாத்திரத்துக்கும் பொருந்திப்போவார் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது. விக்ரம் ஆதித்த கரிகாலனை நம் கண்முன் நிறுத்தியிருப்பார். இந்த போரும் பாட்டும் கள்ளும் எல்லாம் அவளை மறக்கத்தான் என்று அவர் கர்ஜிக்கும் ப்ரோமோவே அவர் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்தது. எதிர்பார்ப்பை திரையில் அவர் பூர்த்தி செய்தார். இப்போதும் விக்ரமின் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.




எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள தங்கலான்:


பா.ரஞ்சித் உடன் முதன்முறையாக விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. நடிகர் பசுபதி, நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் நிலையில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவா  வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படம் மூலம் ஏற்கெனவே இந்தக் கதைக்களம் கவனம் ஈர்த்த நிலையில், இந்தக் களத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போது தங்கலான் படம் உருவாகி வருவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.


நடிகர் விக்ரம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகின்ற நிலையில் தங்கலான் பற்றிய அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாடல், டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர் என்ற அந்த பல்கலை வித்தகரை பிறந்தநாளில் நெஞ்சார வாழ்த்துவோமாக.