நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் தெலுங்கில் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வரும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 






2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்குப் பின், 2 ஆண்டுகள் கழித்து  விஜய்க்கு பொங்கல் வெளியீடாக ‘வாரிசு’ படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 






கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வாரிசு படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. வசூல் நிலவரத்தை பொறுத்தவரை வாரிசை விட துணிவு அதிகமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. 






இதனிடையே வாரிசு படம் தெலுங்கில் மட்டும் 11 ஆம் தேதி வெளியாகவில்லை. காரணம் ஜனவரி 12 ஆம் தேதி நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ”வீர சிம்ஹா ரெட்டி” மற்றும் 13 ஆம் தேதி சிரஞ்சீவியின் “வால்டர் வீரய்யா” படம் வெளியாகினது. இதனால் தெலுங்கு ஹீரோக்களின் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான “வாரிசுடு” தள்ளிவைக்கப்பட்டது. 






இதனால் துணிவு படத்தின் வசூலை விட வாரிசு படத்தின் வசூல் சற்று குறைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் வாரிசுடு படம் இன்று தெலுங்கில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் வெளியானது. தமிழ்நாடு ரசிகர்கள் தோற்று விடும் அளவுக்கு தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதன் வீடியோக்கள் வெளியாகி மற்ற நடிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.