தன் வாழ்வில் நடந்த முக்கியமான விஷயம் ஒன்றை நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி நாம் காணலாம்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வெளியான சூது கவ்வும் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குநர்களின் ஹீரோவானார். ஆண்டுக்கு அதிக படம் கொடுத்த ஹீரோ என்ற பெருமையை சில ஆண்டுகளாக தக்க வைத்தார். மேலும் பல படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்தார்.
நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து விஜய் சேதுபதி சினிமாவில் முன்னேறினார். இதற்கிடையில் ஹீரோவாக மட்டுமல்லாமல் ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் என அனைவருக்கும் வில்லனாக நடித்துள்ளார். விரைவில் விஜய் சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” வெளியாகவுள்ளது. இதனிடையே வாழ்க்கையில் பல தடைகளை கடந்தே அவர் சினிமாவில் இந்த உயரத்துக்கு வந்துள்ளது பலருக்கும் தெரிந்த விஷயம்
இப்படியான நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில், தான் போட்ட முதல் ஆட்டோகிராஃப் போட்டது பற்றி நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பகிர்ந்திருந்தார். அதில், “நான் லீ படத்தில் துணை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது கோயம்புத்தூரில் உள்ள அமராவதி அணை பக்கம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. லீ படத்தில் சிபிராஜ் தான் ஹீரோவாக நடித்தார். நான் அந்த நேரத்தில் சீரியல் ஒன்று நடித்துக் கொண்டிருந்தேன். படத்தில் இடம்பெற்ற ஃபுட்பால் காட்சிகளை படமாக்கி கொண்டிருந்தோம். அப்போது அங்கு ஷூட்டிங் பார்க்க வந்தவர்கள் ஹீரோவான சிபிராஜிடம் ஆட்டோகிராஃப் வாங்கி கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பையன் மட்டும் என்கிட்ட வந்து வாங்குனான். நான் அந்த பையனிடம், “ஹீரோ அங்க இருக்காருடா.. என்கிட்ட ஏன் ஆட்டோகிராஃப் வாங்குற.. அங்க போடா” என சொன்னேன்.
ஆனால் அந்த பையன் என்னிடம், “அண்ணா நான் உங்களை சீரியலில் பார்த்திருக்கிறேன்” என கூறினான்.அவன் 7 அல்லது 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பான் என நினைக்கிறேன். நான் பெண் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். அதில் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தான் லீ படம் நடிச்சிட்டு இருந்தேன். அப்பதான் நான் சில விஷயங்களை நினைச்சேன். நம்மளையும் ஒருத்தன் கண்டுபிடிச்சி ஆட்டோகிராஃப் வாங்குகிறானே என மிகவும் பெருமைப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.