மகாராஜா


விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கிய இப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவானது. இந்தி இயக்குநர் அனுராக் கஷ்யப் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தார். மகாராஜா படத்தின் ப்ரோமோஷன் முதல் டிரைலர் வரை படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் படம் மிக சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையில் அமைந்திருந்தது. நான் லீனியர் திரைக்கதை , எதிர்பார்க்காத திருப்பம் , பார்வையாளர்கள் படத்துடன் உணர்ச்சிவசமாக தொடர்பு படுத்தி பார்த்துக் கொள்ளும் அப்பா மகள் செண்டிமெண்ட் என ஃபேமிலி ஆடியன்ஸை திருபதி படுத்தியது மகாராஜா. 


திரையரங்கில் 100 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்து ஓடிடியில் இப்படம் வெளியானது . ஓடிடியில் வெளியாகி தமிழ் மட்டுமில்லாமல் இந்தி பட ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமத்தை  நடிகர் ஆமிர் கான் பெற்றுள்ளதாகவும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஜா படம் வெளியாகி இரண்டு மாத காலம் முடியும் தருவாயில் இப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை


மகாராஜா படம் சுமார் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம் என்பதால் இப்படத்தின் செலவரை குறைக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி படத்தில் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெறவில்லை என  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பற்றிய உண்மைத்தன்மைப் பற்றிய பல கேள்விகள் இணையதளத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன என்றாலும் சினிமா வட்டாரங்களில் இந்த தகவல் உணமை என்றே பேசி வருகிறார்கள். தற்போது படம் பெரியளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் படத்தின் லாபத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை அவருக்கு சம்பளமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.






முன்னதாக மகாராஜா படத்தின் ப்ரோமோஷனில் பேசிய விஜய் சேதுபதி ஏற்கனவே தான் நடித்த நிறைய படங்களுக்கு இன்னும் சம்பளம் கூட வாங்கியதில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.