தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார்.
தளபதி 69:
தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய அவர், அரசியலில் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரண்டு படங்களில் மட்டும் நடிப்பதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அவரது நடிப்பில் உருவாகிய அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமான கோட் படம் கடந்த 5ம் தேதி வெளியானது. நடிகர் விஜய்யின் கடைசி படத்தை முன்னணி இயக்குனர் எச்.வினோத் இயக்க இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது.
இன்று வருகிறது அப்டேட்:
இந்த சூழலில், நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான தளபதி 69 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி 69 படத்தை கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் பெங்களூரை மையமாக கொண்டு இயங்கும் கன்னட திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். தயாரிப்பு, திரைப்பட விநியோகஸ்தம் என பல துறைகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் இவர்கள் திரைப்பட தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சகத் என்ற படம் மூலமாக தயாரிப்பாளர்களாக அறிமுகமான இந்த நிறுவனம், பை டூ லவ் என்ற படத்தையும் தயாரித்துள்ளனர். கன்னடத்தில் தற்போது கேடி – தி டெவில் னெ்ற படத்தை தயாரித்து வருகின்றனர். மேலும், கன்னடத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள மார்ட்டின், டோனி ஆகிய படங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.
தமிழில் அறிமுகமாகும் கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ்:
இந்த சூழலில், முதன்முறையாக தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தயாரிப்பாளர்களாக கேவிஎன் நிறுவனம் அறிமுகமாக உள்ளது. விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி முழு மூச்சில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். பிரபல படங்களான ஆர்ஆர்ஆர், சீதாராமன், கல்கி, ஆகிய படங்களின் விநியோகஸ்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கங்குவா படத்தின் விநியோக உரிமையும் இந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதாலும், எச்.வினோத் இதை இயக்குகிறார் என்பதாலும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.