தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு நிகராக வெற்றிப்படங்களை அளித்து வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரது கடைசி படமான ஜனநாயகன் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
ரஜினியை எப்படி பார்க்கிறார் விஜய்?
கடந்த சில வருடங்களாக ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில் ரஜினிகாந்தை விஜய் எப்படி பார்க்கிறார்? என்று கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "படையப்பா எங்களோட ஆல் டைம் ஃபேவரைட். அப்போ விஜய் ரஜினியோட ஃபேன் பாய். எல்லாருக்கும் தலைவரை பிடிக்குற மாதிரி விஜய்க்கும் தலைவரை பிடிச்சது. ஆனா, இப்போ தலைவருக்கே விஜய்யை பிடிச்சுருக்கு. இதுதான் இவரோட வளர்ச்சி. ஃபேன் பாய்தான் ரொம்ப பிடிக்கும்.
அவரோட படங்கள், அவரோட மேனரிசம் ஒரு நபராக பிடிக்கும். அதான், இப்போ அவரே சாெல்லிட்டாருல. ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான் சொல்லிட்டாரு. அது யாருனு உங்களுக்கே தெரியும்னு அவரே சொல்லிட்டாரு. நான் தளபதி, தலைவர் சூப்பர்ஸ்டார்னு அவரே சொல்லிட்டாரு. இதுக்கு அவரே முற்றுப்புள்ளி வச்சுட்டாரு."
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினி ரசிகர்கள் - விஜய் ரசிகர்கள் மோதல்:
ஏனென்றால், நடிகர் விஜய் தன்னுடைய தொடக்க கால படங்கள் பலவற்றிலும் ரஜினியின் ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். புதிய கீதை படத்தில் அண்ணாமலை தம்பி இங்க ஆட வந்தேன்டா என்ற பாடலுக்கு ரஜினிக்கு அடுத்து நான் என்ற அர்த்தத்தில் ரஜினி ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பார்.
பின்னர், தமிழ் சினிமாவின் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை அளித்த விஜய் படத்தின் வியாபாரம் ரஜினி படத்தின் வியாபாரத்திற்கு நிகராக நடந்ததை அடுத்து, அவரது ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே இணையதளத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி:
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ரஜினி கழுகு - காகா கதையை கூறியது, விஜய்யையே அவர் மறைமுகமாக தாக்கி பேசியதாகவும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின்பு, ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல் இன்னும் வலுப்பெற்றது.
இதன்பின்பே, இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்று விஜய் பேசி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், ரஜினி ரசிகர்களின் வாக்குகள் மிக மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு அவரது ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் ஆகியோரிடம் இணையத்தில் மிக கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தற்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நிலையில் மற்ற நடிகர்களின் ரசிகர்களின் வாக்குகளை எப்படி விஜய் கவரப்போகிறார்? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.