நடிகைகள் என்றால் ஸ்லிம்மாக இருக்க வேண்டும், நடிகைகள் புடவை கட்டுவது ஃபேஷன் இல்லை என பாலிவுட்டின் பல எழுதப்படாத விதிகளை தனது நடிப்பு மற்றும் திறமையால் துவம்சம் செய்தார் வித்யா பாலன். மிஷன் மங்கல், பா, ஷகுந்தலா தேவி, கிஸ்மத் கனெக்‌ஷன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். கேரளாவைப் பூர்விகமாகக் கொண்டவர். அண்மையில் சினிமாவில் தான் நடித்த அம்மா கதாப்பாத்திரங்கள் பற்றி பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். சினிமா அம்மா என்றாலே குடும்பத்தின் விதிகளைப் பின்பற்றுபவராகவும், தனக்கு என விருப்பங்கள் எதுவும் இல்லாதவராகவும் காட்டும் வழக்கத்தைத் தான் மாற்றியது குறித்து அவர் அந்தப் பேட்டியில் மனம் திறந்திருக்கிறார். 






“அப்படி ரூல்ஸ்களைப் பின்பற்றி வாழும் அம்மாக்கள் என்கிற ஐடியாவே எனக்குப் பிடித்ததில்லை. ஒருவேளை கடவுளுக்கு அது கேட்டிருக்கக் கூடும் போல. அதனால்தான் எனக்கு அமைந்த கதாப்பாத்திரங்களும் இந்த விதிகளை மாற்றியெழுதும் அம்மாக்களாகவே அமைந்தது. நான் நடித்த அம்மா கதாப்பாத்திரங்கள் அவர்களுக்குத் தேவையானதை கேட்டுப் பெறுபவர்களாக இருந்தார்கள், அவர்கள் ரூல்ஸ் பின்பற்றியதில்லை, அவர்களுக்கு என உணர்வு இருக்கும் என்பதை என என் கதாப்பாத்திரங்கள் பிரதிபலித்தன. அதனால் அவர்கள் அம்மாக்கள் இல்லை என அர்த்தம் இல்லையே!”






மேலும், ’அவர்களைப் போன்ற பல பெண்களை நாம் நம்மைச் சுற்றி தினமும் பார்க்கிறோம். ஆனால் தனக்கென தனியே உணர்வுகள் இருப்பதற்காகவே அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள்தான் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். நான் நடித்த சகுந்தலாதேவி படத்தைப் பார்த்துவிட்டுப் பல பெண்கள் இதனை என்னிடம் பகிர்ந்திருக்கிறார்கள். அந்தப் படத்தில் வரும் ஒரு வசனம், ‘என்னால் மிகச்சிறந்தவளாக இருக்க முடியும்போது நான் ஏன் நார்மலாக இருக்கவேண்டும் என நினைக்கப் போகிறேன்?’’ என்ற வசனமே இதனைச் சொல்லிவிடும். 


பெண்களுக்குத் தேவையான மாற்றத்தை சினிமா எப்படி காட்சிப்படுத்தி வருகிறது என்பது குறித்துப் பேசிய வித்யா பாலன், ‘நமது சமூகம் பெண்களை அனுகும் பார்வையை சினிமா ஏற்கெனவே அதன் கதைகள் மற்றும் கதாப்பாத்திரங்கள் வழியாக மாற்றி வருகிறது.நாம் பெண்கடவுள்களை பல வடிவங்களில் வணங்கி வருகிறோம்.அதே சமயம் நீயும் நானுமே அந்தப் பெண்கடவுள்கள்தான் என்பதை நாம் உணரவேண்டும்’எனப் பேசியுள்ளார்.