பிரபல சின்னத்திரை ஸ்டாண்ட் அப் காமெடியன் வெங்கடேஷ் காலை உடைத்ததாக பாஜக நிர்வாகிகள் 3 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்தவர் வெங்கடேஷ். இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இதனிடையே மதுரையில் தபால் தந்தி நகரில் வெங்கடேஷ் வசித்து வருகிறார். இவர் தனது டிரைவர் மோகனுடன் நேற்று முன்தினம் நாராயணபுரம் கண்மாய் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது காரை வழிமறித்த சில நபர்கள், டிரைவரை அங்கிருந்து விரட்டி விட்டு வெங்கடேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது காலை உடைத்துள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் வெங்கடேஷ் அலற, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் வந்து பார்த்துள்ளனர். உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் வெங்கடேஷை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவரை மீட்ட இடத்தில் பாஜக துண்டு ஒன்று கிடந்துள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து வெங்கடேஷ் கருத்து தெரிவித்ததால், இதுதொடர்பாக தாக்குதல் நடைபெற்றதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.
இதில் திடுக்கிடும் திருப்பமாக மதுரை மாவட்ட பாஜகவில் இருக்கும் வைரமுத்து, மலைச்சாமி, ஆனந்தராஜ், ராஜ்குமார், மோகன் ஆகியோரோடு வெங்கடேஷின் மனைவில் பானுமதியும் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே வெங்கடேஷ் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து அவரது குடும்ப பிரச்சினையை தனக்கு சாதமாக்கி கொண்டு பழிவாங்கியுள்ளார். அதாவது வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி பானுமதி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
வெங்கடேஷ் பானுமதிக்கு விவாகரத்து நோட்டீஸ் வேறு அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த பானுமதி, வெங்கடேஷ் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக டிரைவர் மோகனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து உறவினரும், பாஜக நிர்வாகியுமான வைரமுத்துவை சந்தித்தபோது, வெங்கடேஷ் பற்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கோபத்தில் இருந்த வைரமுத்து இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன் கூட்டாளிகள் உடன் இணைந்து வெங்கடேஷ் காலை உடைத்துள்ளார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.