வாழ்க்கையில் எல்லா நேரமும் ஒரு வீரனாக வாழ்வதற்கு இயக்குநர் மோகன் ஜியால் மட்டுமே முடியும் என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி புகழாரம் சூட்டியுள்ளார். 

Continues below advertisement

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, பகாசூரன், ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜியின் அடுத்தப் படமாக திரௌபதி படத்தின் 2ம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்து சூடன், நட்டி, வேல ராமமூர்த்தி, நாடோடிகள் பரணி என பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் வேல ராமமூர்த்தி, “நான் மோகன் ஜி சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்தே எப்ப இவர் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில் அப்போது நடிக்க முடியாமல் போய் விட்டது. அப்படித் தான் திரௌபதி 2 பட வாய்ப்பு அமைந்தது. இந்த படத்துக்கு 2 நாட்கள் தான் எனக்கு ஷூட்டிங் அமைந்தது. சினிமாவில் என்னுடைய முதல் வரலாற்று படம் என்பது சிறப்பு வாய்ந்த விஷயமாகும்.

Continues below advertisement

ஒரு வீரனாகவே வாழ்க்கையில் வாழ்வதற்கு மோகன் ஜியால் மட்டுமே முடியும். அந்த முகத்தில் சிரிப்பு, கோபம் என எந்த உணர்ச்சியும் வெளிவராது. எண்ணத் தாகம், தேடல், உழைப்பின் அடையாளமாக உள்ளார். துணிச்சல், தைரியம் இருப்பதால் தான் இப்படி ஒரு படத்தை அவர் எடுத்திருக்கிறார். அவர் சினிமாவுக்குள் வந்ததில் இருந்து எத்தனை அம்புகள் வீசப்பட்டிருக்கும். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு கோபப்படவில்லை. எல்லாரும் சரித்திரப் படத்தை எடுத்து விட முடியாது. 

வீர வல்லாள தேவன் சம்புவராயர் வரலாற்றை எடுத்திருக்கிறார். இந்த படத்தை எடுக்க நிறைய இயக்குநர் முயன்றார்கள். ஆனால் மோகன் ஜி அந்த கனவை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் என சொல்லலாம். திரௌபதி 2 படத்தில் எனக்கு பக்கம், பக்கமாக வசனம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை பேசும் நடிகர், பார்க்கும் ரசிகன் ஆகியோருக்கு நெருடல் ஏற்படாத வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் தான் நடைபெற்றது. 

எத்தனை வித்தைகளை மோகன் ஜி கையில் வைத்திருக்கிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை வேற லெவலில் போட்டிருக்கிறார். தயாரிப்பாளருக்கு இதுதான் முதல் படம். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி எல்லாம் காட்டிக் கொள்ளவில்லை. இது திரௌபதி பொங்கல் என சொல்லலாம். நான் முழு படத்தையும் பார்த்தேன். திருவண்ணாமலையை 14ம் ஆண்டில் நூற்றாண்டில் ஆண்ட வீர வல்லாள தேவன் சம்புவராயர் பற்றிய உண்மை சம்பவத்தை எடுத்துள்ளார். இதில் எந்த சாதியையும் காட்டவில்லை. இந்த சரித்திரத்தை அனைவரும் காண வேண்டும்” என தெரிவித்தார்.