கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் பெரிதும் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் சினிமாவில் தனது அடுத்த பயணத்திற்கு தயாராகி வருகிறார். இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலுக்கு நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதனால் அவர் பழையபடி நடிப்பதற்கு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சூரஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசினார்.  அப்போது மிகவும் உருக்கமாக பேசினார். குறிப்பாக தான் பலரையும் சிரிக்க வைத்தாலும், பெரிய மன வருத்தத்தில் இருந்ததாகவும் அதற்கு ஒரு குட்டிக்கதையையும் அவர் கூறினார். 


''ஒரு நோயாளி டாக்டரிம் போய் ஐயா, எனக்கு மனசே சரியில்லை. தூக்கம் இல்லை. எனக்கு எதாவது ஒரு மருத்துவம் பண்ணுங்கனு கேட்டு இருக்கார். அதுக்கு அந்த டாக்டர், இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை, நீங்கள் திங்கள்கிழமை வாங்க. நான்  மருத்துவம் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். அதற்கு அந்த நோயாளி, இல்லைங்க எனக்கு இப்போதுதான் ரெஸ்ட், உண்மையிலேயே எனக்கு மனசு சரி இல்லை. நிம்மதி இல்லை. மருத்துவம் தாங்க என்றார். அதற்கு பதிலளித்த டாக்டர், அப்படியென்றால் ஒன்று செய்யுங்க, பக்கத்துல ஒரு சர்க்கஸ் நடக்குது. அங்கே ஒரு பஃபூன் பிரமாதமாக காமெடி பண்றார். அந்த சர்க்கஸ நாம் பார்ப்போம். அந்த காமெடியை பார்த்த உங்க மனசுல உள்ள பாரமெல்லாம் இறங்கிடும். அதற்கு பின் எளிதாக மருத்துவம் பார்க்கலாம் என்றுள்ளார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த நோயாளி கூறியுள்ளார், அந்த பஃபூனே நான் தான் என்றுள்ளார். அந்த வாழ்க்கையைத் தான் நான் வாழ்ந்தேன் என்றார்''




கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியுள்ள வடிவேலுவின் நடிப்பில் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கரே தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி என்ற பெயரில் உருவாகி வந்தது. ஆனால், வடிவேலுவிற்கும் தயாரிப்பாளர் தரப்பிற்கும் இடையே போட்டி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், நடிகர் வடிவேலு படத்தில் நடிக்க ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பில் குற்றம் சாட்டியது.  இதனால், நேற்றைய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலும், இயக்குனர் ஷங்கர் படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஷங்கர் படத்தில் இனி நடிக்க மாட்டேன். இனி அந்த பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், திரைத்துறையில் மீண்டும் நடிக்க இருப்பது குறித்தும் அவர் பேசினார்