மாமன்னன் படம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். 


மாமன்னன்  படம் 


இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி வெளியானது. வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும்  நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். வட மாவட்ட அரசியலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் மாமன்னன் படத்தை கொண்டாடினர். 


மிகப்பெரிய திருவிழாவா இருக்குது


இப்படியான நிலையில், மாமன்னன் படத்தில் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வடிவேலு, ‘இன்றைய நாள் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்குது. மிகப்பெரிய திருவிழாவா இருக்குது. எனக்கு விவரம் தெரியும்போது ஒரு ஊர்ல ஒரு தியேட்டர்ல ஒரு படம் 100 நாள் ஓடுச்சின்னா பெரிய விஷயம்.


ஆனால் இன்னைக்கு 500 தியேட்டர்ல ஒருநாள் ஓடுனாலே 500 நாள் கணக்கு அது. மாமன்னன் படத்தை 50 நாட்கள் உதயநிதி வெற்றிநடை போட வைத்திருக்கிறார். நான் பல நகைச்சுவை படம் நடித்துள்ளேன். ஆனால் எனக்கு இந்த ஒரு படம் மொத்த பெயரையும் வாங்கி தந்துள்ளது. என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது திரைப்படம் மாமன்னன்.என்கிட்ட மாரி செல்வராஜ் கதை சொல்றப்ப, அவரிடம் இருந்த குடும்ப பாங்கு, பாசம் இதையெல்லாம் பார்க்கும்போது 30 படம் இயக்கிய பண்பை  பார்த்தேன்.


வடிவேலுக்கு பிடித்த காட்சிகள் 


இவ்வளவு பெரிய வெற்றியை மக்கள் கொடுப்பாங்க என எதிர்ப்பார்க்கலை. இந்த படத்தை கண் இமைக்காமல் பார்க்க வைத்த இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு தான் இந்த இடத்தில் கைதட்டல் கொடுக்கவேண்டும்.இந்த படத்தில் எனக்கு ஆறு காட்சிகள் இப்படத்தில் மிகவும் பிடித்திருந்தது. அது என்னை தூங்க விடவில்லை. மலை உச்சியில் நின்று அழுகும் காட்சிகள் நானே தியேட்டரில் ஆடியன்ஸாக இருந்து வேறு ஒருவரை போன்று தான் அந்த காட்சியை பார்த்து அழுதேன்.


இடைவேளை காட்சியில் இருவரும் பைக்கில் செல்லும் போது அந்த பைக்கும் ஒரு சீன் வரும். படம் முழுவதும் உதயநிதி இறுக்கமான முகத்துடன் உள்வாங்கி நடித்திருப்பார். அதன்பிறகு  மனைவியின் காலை பிடித்துக்கொண்டு பேசும் காட்சியும் பிடித்தது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அந்த காட்சியை குறிப்பிட்டு என்னிடம் பேசினர். இன்னொரு காட்சி என்னுடைய மனசை ரொம்ப உலுக்கி எடுத்து விட்டது.கடைசியில் தேர்தலில் வெற்றி பெற்றபின் அந்த வெற்றி பத்திரம்  கொடுக்கும் போது  உதயநிதியிடம் பேசும் காட்சியும் பிடித்தது.


மாரி செல்வராஜூக்கு அட்வைஸ்


மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் மேலும் மேலும்  வளர வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் ஜீவன், வலி இருந்தது. இதுபோன்ற நிறைய படங்களை எடுக்க வேண்டும். மாரி செல்வராஜுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் நகைச்சுவை படங்களும் இயக்க வேண்டும். இதையே எடுத்து உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். மாற்றி மாற்றி பயணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


மாமன்னன் படம் எனக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தந்தது. இதுபோன்ற வெற்றி எனக்கு கிடைத்தது இல்லை. ரெட் ஜெயன்ட் மூவிஸ் உடன் இரண்டு படம் தான் நடித்துள்ளேன். ஆதவன், மாமன்னன் ஆகிய இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இதை சொல்வதில் எனக்கு பெருமையாக உள்ளது’ என வடிவேலு தெரிவித்துள்ளார்.