The Greatest of All Time படத்துக்குப் பின் நடிகர் பிரஷாந்த் சினிமா வாழ்க்கை வேறு தளத்துக்கு செல்லப்போவதாக அவரது அப்பாவும், இயக்குநருமான தியாகராஜன் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் பிரஷாந்த். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் எண்ட்ரீ கொடுத்த அவர் இன்று பெரிய அளவில் நடிக்காவிட்டாலும் மறக்க முடியாத நடிகராக திகழ்கிறார். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கே சவால் கொடுக்கும் வகையில் திகழ்ந்த பிரஷாந்தை ஸ்கிரீனில் காண முடியவில்லை என பலரும் வருத்தப்படவே செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இனிப்பான செய்தி காத்திருந்தது. 


ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள The Greatest of All Time படத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிரஷாந்த் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானபோதே ரசிகர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இந்த படத்தில் சினேகா, லைலா, பிரபுதேவா என 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் இடம் பெற்றுள்ளனர். 


கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி The Greatest of All Time படத்தில் இருந்து “விசில் போடு” பாடல் வெளியானது. மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க விஜய் பாடியிருந்தார். இதன் வரிகள் அடங்கிய வீடியோவின் கடைசியில் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா ஆகியோர் பட்டையை கிளப்பும் வகையில் டான்ஸ் ஆடியிருப்பார்கள். குறிப்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு பிரஷாந்தை திரையில் பார்த்ததில் பலரும் மகிழ்ந்தனர். 


இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய பிரஷாந்தின் அப்பாவான தியாகராஜன், “கோட் படத்தில் பிரஷாந்த் டான்ஸ் ஆடியது ரொம்ப ஈர்த்தது. படத்தில் அவருக்கு சமமான ஒரு கேரக்டர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், டான்ஸ் ஆடுவதில் கூட அந்த சமநிலையை பேணியதற்கு விஜய்க்கு ஒரு நல்ல மனசு உள்ளது. அந்த விஷயத்தில் நான் அவரை பாராட்டுகிறேன். கதை சொல்லும்போதே விஜய்க்கு சமமான ஒரு கேரக்டர் தான் என பிரஷாந்துக்கு சொல்லியிருந்தார்கள். 


பிரஷாந்த் சின்ன வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். அதனால் தான் அவருக்கு அந்த நளினங்கள் மிக எளிதாக வரும். அப்படித்தான் ஆணழகன் படத்தில் பரதநாட்டியம் ஆட வைத்திருப்பேன். அந்த வகையில் பிரஷாந்த் நடித்து வரும் கோட் படம் மிகப்பெரிய ஹிட் ஆகும். வெங்கட் பிரபுவுக்கு என ஒரு ஸ்டைல் உள்ளது. இந்த படத்தை பெரிய அளவில் ஏஜிஎஸ் நிறுவனம் பண்ணுகிறது. எதுக்கும் செலவு பண்ண யோசிக்காமல் செய்கிறார்கள். கோட் படத்துக்கு பின் பெரிய பெரிய படங்களில் பிரஷாந்த் நடிக்கப்போகிறார்” என தெரிவித்துள்ளார்.