தமிழ் சினிமாவில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் எஸ்.வி.சேகர். இயக்குநர் விசுவின் உதவி இயக்குநராக இருந்து மணல் கயிறு படத்தின் மூலம் நடிகராக மாறினார். அதைத்தொடர்ந்து கமல், ரஜினி படங்களிலும் நண்பனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தீவிர அரசியலில் இயங்கி வந்த இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். 

இந்நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி சுந்தரம் சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியலின் முன்னோட்ட காட்சியும் பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது. அதாவது 74 வயது நிறைந்த எஸ்.வி.சேகர் 30 வயது நிறைந்த இளம்பெண்ணுக்கு தாலி கட்டுவதை போன்ற முன்னோட்ட காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் சீரியலுக்கான முன்னோட்ட காட்சி என தகவல் தெரிவிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரம் சீரியலில் மகன், மருமகள், பேரன் அனைவரும் இருந்தும் இளம்பெண்ணுக்கு தாலி கட்டுவது போன்ற காட்சிகள் இடம்பிடித்தன. 

கலைஞர் தொலைக்காட்சியில் ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான மீனாட்சி சுந்தரம் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. ஆனால், 100 எபிசோடுகளை தாண்டியுள்ளது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரம் சீரியல் இன்னும் சில நாட்களில் முடிவடைந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதியில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் வரவுள்ளதாம். ஏப்ரலில் தொடங்கிய சீரியல் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வர காரணம் என்ன என்பது தெரியவில்லை என ரசிகர்கள் புலம்புகிறார்கள்.