தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. கங்குவா படத்திற்கு பிறகு இவர் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வந்தார்.


சூர்யா 44 படப்பிடிப்பு நிறைவு:


வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை நடிகர் சூர்யாவே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள சூர்யா, ஒரு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான படப்பிடிப்பு பல இடங்களில் முடிந்துள்ளது. அற்புதமான திறமையான படக்குழுவினருடன் ஏராளமான நினைவுகள். வாழ்நாள் முழுவதும் கார்த்திக் சுப்பராஜ் என்ற சகோதரன் உருவாகியுள்ளார். சூர்யா 44 படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபவத்தை தந்ததற்கு படக்குழுவிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.






நட்சத்திர பட்டாளங்கள்:

சூர்யா 44 படமானது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களிலே வித்தியாசமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் பிரபல மலையாள நடிகர்கள் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.


மேலும் கருணாகரன், நாசர், சுஜித், தமிழ், ப்ரேம்குமார், ராமச்சந்திர துரைராஜ், சந்தீப்ராஜ். முருகவேல், ரம்யா சுரேஷ் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த படத்தை சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஷபீக் முகமது அலி செய்துள்ளார்.

இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்:


இந்த படம் எப்போது ரிலீஸ்? என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகளை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், படத்தின் பெயர் என்னவென்று விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது கங்குவா படத்தின் வெளியீட்டில் சூர்யா தீவிரமாக கவனம் செலுத்தி வருவதால், கங்குவா படத்தின் ரிலீசிற்கு பிறகு சூர்யா 44 படத்தின் டீசர், ட்ரெயிலர் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் சூர்யா 44 படம் பொங்கலுக்கு வெளியாகவே வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.