நடிகர் சூர்யா நடிப்பதில் மட்டுமல்லாது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பது மட்டுமல்லாமல், அறிமுக இயக்குநராக இருந்தாலும் பரவாயில்லை கதைக்களம் வலிமையான இருந்தால் போதும் என பல படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் உள்ளிட்ட படங்கள் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக வெளியான உடன்பிறப்பே திரைப்படமும் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் பாலா இயக்கத்தில் புதிய படத்தை சூர்யா தயாரிக்கவுள்ளார் என்ற செய்தி , சில மாதங்களாக உலா வந்துக்கொண்டிருந்த நிலையில் , சமீபத்துல் இந்த கூட்டணி இணைவது உறுதியானது.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்துல் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சூர்யா . அதில் “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” என குறிப்பிட்டுள்ளார்.
பாலா - சூர்யா கூட்டணியில் வெளியான 'நந்தா', 'பிதாமகன்' உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சூர்யாவின் திரையுலக பயணத்தை நந்தாவிற்கு முன், நந்தாவிற்கு பின் என பிரிக்கலாம். அந்த அளவுக்கு சூர்யாவின் சினிமா கெரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் நந்தா. அதன் காரணமாத்தானோ என்னவோ சூர்யா , இயக்குநர் பாலா மீது மிகுந்த மரியாதையுடன் நடந்துக்கொள்வாராம். பாலா இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் நாச்சியார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டை பெற்றார். இயக்குநர் பாலா நடிகர் , நடிகைகளை கதைக்கு ஏற்ற மாதிரியாக நடிக்க வைப்பதில் கில்லாடி.சூர்யா தயாரிப்பில் பாலா இயக்கும் புதிய படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் சூழலில், படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.