ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கருப்பு. இந்த படத்தின் டீசர், சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசருக்கு வரவேற்பு எப்படி உள்ளது, இந்த படம் சூர்யாவுக்கு கை கொடுக்குமா என்பதை பார்ப்போம்.
ஜூலை 23 சூர்யா பிறந்த நாளில் ‘கருப்பு‘ டீசர் வெளியீடு
ஜூலை 23-ம் தேதியான இன்று சூர்யாவின் பிறந்த நாள். இதை ஒட்டி, ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் கருப்பு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவின் தோற்றம் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்று கூறலாம். மேலும், அவரது ஸ்டைலிஷான ஆக்ஷனுக்கு பஞ்சமில்லை என்பது டீசலை பார்க்கும்போதே தெரிகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், த்ரிஷா, ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவதா, நட்டி சுப்பிரமணியம், சுப்ரீத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அன்பரிவ் மற்றும் விக்ரம் மோர் அமைத்துள்ளனர்.
வழக்கறிஞராக சூர்யா
கருப்பு திரைப்படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடிக்கிறார். மேலும், அவரது கதாபாத்திரம் கருப்பசாமியுடன் ஒப்பிட்டு காண்பிக்கப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கும் சூர்யா, பார்ப்பதற்கும் ஸ்டைலாக இருப்பதால், இந்த படம் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று தான் தோன்றுகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் வரும் இந்த படம் நிச்சயம் கமர்ஷியலாக இருக்கும் என நம்பலாம்.
தனது உண்மையான பெயரான சரவணன் எனும் கேரக்டரில் இந்த படத்தில் தோன்றுகிறார் சூர்யா. இந்த படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும், டீசரை வைத்து பார்க்கும்போது, சட்டப் போராட்டம் நடத்தும்போது நாயகன் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது. இந்த டீசரில், வில்லன் என்று யாரும் காண்பிக்கப்படவில்லை. எனவே, அது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருக்கிறது.
சமீப காலமாக சரிந்த சூர்யாவின் மார்கெட்
சமீப காலமாக சூர்யா நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அவர் நடிப்பில் கடைசியாக, பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான கங்குவா மிகப்பெரும் தோல்விப் படமாக அமைந்து, அவரது மார்கெட்டை மேலும் சரித்தது.
அவர் வழக்கறிஞராக நடித்த ஜெய் பீம் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்த நிலையில், அதற்குப்பின் வெளியான எதற்கும் துணிந்தவன், ரெட்ரோ ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
அதனால், சூர்யா தற்போது நம்பி இருப்பது இந்த ‘கருப்பு‘-வைத் தான். இந்த படம் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
டீசரில், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், வரும் தீபாவளிக்கு படம் வெளியானால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.