சுதா கொங்கரா இயக்கத்தில் உண்மை கதையினை மையமாக கொண்டு சூர்யாவினை வைத்து இயக்கிய திரைப்படம்தான் சூரரைப்போற்று. கிராமத்தில் பிறந்து எப்படியாவது விமானத்தினை இயக்கி விட வேண்டும் என்று துடிப்புடன் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா, எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் கதைக்களம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.
இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான சூரரைப்போற்று ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ள இந்த திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை பெற்றது. அதேபோல் சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று திரைப்படத்துக்காக சூர்யா பெற்றார். இந்தத் தகவலை திரைப்பட விமர்சகர்கள் பலர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கிடையே தமிழ்நாடு வந்து சேர்ந்த விருதை இன்று 2டி எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பெற்றுக்கொண்டுள்ளனர். விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு சூர்யா ஜோதிகா இருவரும் சேர்ந்து விருதினைப் பிரிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்துப் பேசிய சூர்யா, ‘இது படக்குழுவுக்காக.இந்தப் படத்துக்காக உழைத்தவர்களுக்கும் வெற்றிபெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்’ எனக் கூறினார்.
முன்னதாக, ஐஎம்டிபி ( IMDB) என்ற ரேடிங் தளத்தில் உலகளவில் நல்ல படங்களுக்கு ரசிகர்கள் கருத்துத் தெரிவிப்பதன் அடிப்படையில் எந்த படம் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை கணக்கிட்டு பட்டியலிடுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் இந்த ஆண்டு நடைபெற்ற ரேட்டிங்கில் சூரரைப் போற்று திரைப்படம் 10க்கு 9.1 ரேட்டிங் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.