கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சுமார் 350 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது . சூர்யாவின் கரியரிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பான் இந்திய அளவில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. கங்குவா படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமம் மற்றும் ரூ.80 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபயர் சாங் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஃபயர் சாங் குறித்து சூர்யா
கங்குவா கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம். இது எல்லாம் இயக்குநர் சிவா என்கிற ஒற்றை மனிதரால் மட்டுமே சாத்தியமானது. கங்குவா படத்தின் ஃபயர் சாங்கை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். இந்தப் பாடலில் சில வரிகளை பாடி நடிக்கும்போது நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். ஆயிரம் வருஷத்திற்கு முன்பிருந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி போர் செய்தார்கள், எந்த மாதிரியான சவால்களை கடந்து வந்தார்கள் , அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கினார்கள் என்பதை இந்த வரிகள் மூலமாக கேட்கும்போது ரொம்ப அழகாக இருந்தது.
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு ஆஸ்கர் வாங்கிய கையோடு இந்தப் பாடலுக்கு நடனம் கற்பித்தார் பிரேம் ரக்ஷித். ஆர்.ஆர்.ஆர் பாடலை எல்லாம் பார்த்துவிட்டு மிரண்டுபோய் நம்மை வைத்து என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என்று நான் பயந்துகொண்டு இருந்தேன். 500 க்கும் மேற்பட்ட ஆர்டிஸ்ட்டுகள் இருந்தார்கள். ஆண்கள், பெண்கள் , குழந்தைகள் என எல்லாரையும் வைத்து சூப்பரான டான்ஸ் மூவ்ஸை கோரியோ செய்துகொடுத்தார்.
அதுமட்டுமில்லாமல் சமீப காலத்தில் நான் நடித்த படங்களில் பெரிதாக ஆடவில்லை என்பதால் இந்தப் பாடலுக்கு நடனமாடுவதை நான் ரொம்பவும் ரசித்து செய்தேன். கங்குவா என்கிற கதாபாத்திரத்தை நம்புவதற்கும் அந்த கதைக்குள் இன்னும் ஆழமாக நான் பயணிக்கவும் இந்தப் பாடல் எனக்கு ரொம்பவும் உதவிகரமாக இருந்தது. நான் மிகவும் ரசித்து நடித்த பாடல்களில் ஃபயர் சாங் முக்கியமானது.