மறைந்த தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.


அபூர்வ கலைஞன் அண்ணன் விஜயகாந்த்


“அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நம்மளோட இல்லைங்கற செய்தி கேட்டு மனசுக்கு அவ்வளவு வருத்தமா இருக்கு. ஒரு கண்ணில் துணிச்சலும் மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞர் அவர்.


கடைக்கோடி மக்கள் வரை எல்லாருக்கும் எல்லா உதவியும் செஞ்சு புரட்சிக் கலைஞனாய், கேப்டனாய் நம் எல்லார் மனசுலயும் இடம்பிடிச்சவர். அண்ணன் விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கறேன். அவரது குடும்பத்தாருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.


அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!” என வீடியோ பதிவினைப் பகிர்ந்துள்ளார் நடிகர் சூர்யா.


 






நடிகர் சூர்யாவுக்கு தனது கரியரின் ஆரம்பக்காலக்கட்டத்தில் விஜயகாந்துடன் அவர் இணைந்து நடித்த பெரியண்ணா திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி சென்னை, மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர்ந்து சில வாரங்கள் சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த் டிச.11ஆம் தேதி உடல்நலன் தேறி வீடு திரும்பிய நிலையில், நேற்று முன் தினம் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தொடர்ந்து இன்று காலை அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே விஜயகாந்த் காலமான செய்தி வெளியாகி திரைத்துறையினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சந்திரபாபு நாயுடு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


நாளை இறுதிச்சடங்கு


மற்றொருபுறம் தமிழ் திரைத்துறையினர், பிறமொழி நடிகர்கள் எனப் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், போக்குவரத்தில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை விஜயகாந்தின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.