நடிகர் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த சிங்கம் படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஏராளமான காவல்துறையை மையப்படுத்திய படங்கள் வெளிவர செய்கின்றன. அவற்றில் எத்தனை படங்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். சிவாஜி, எம்ஜிஆர். உள்ளிட்டவர்களை தாண்டி பிற்காலத்தில் வந்த விஜயகாந்தின் போலீஸ் படங்கள் ரசிகர்களிடையே மிகப்பிரபலம். எல்லா நடிகர்களும் ஒருமுறையேனும் காவல்துறையை மையப்படுத்திய கேரக்டரில் நடித்து விடுவார்கள்.
இப்படியான நிலையில் 2010 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி ‘சிங்கம்’ படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்க, சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். ‘ஆறு’, ‘வேல்’ படங்களுக்கு 3வது முறையாக இந்த கூட்டணி இணைந்திருந்தது. இதனால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதனை ஒருபடி மேலே சென்று ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து படைத்தது இப்படம்.
சிங்கம் படத்தில் அனுஷ்கா, விவேக், ப்ரியா அட்லீ, நாசர், ராதாராவி, பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான நல்லூரில் உள்ள காவல் நிலையத்தில் அதிகாரியாக இருக்கும் சூர்யாவுக்கும், கொலை வழக்கு ஒன்றில் அதே காவல் நிலையத்துக்கு கையெழுத்து போட வரும் பிரகாஷ்ராஜூக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. இதனைத் தொடர்ந்து நடக்கும் பரபர ஆக்ஷன் சம்பவங்கள் தான் இப்படத்தின் ஒன்லைன் கதை. இதில் காதல், காமெடி என விறுவிறு திரைக்கதையால் மாஸ் காட்டியிருப்பார் ஹரி. படத்திற்கு பாடல்களும் பெரும் பக்கப்பலமாக அமைந்தது.
சூர்யாவின் மீசை, அவரின் வசன உச்சரிப்பு என அனைத்தும் இன்றைக்கு கேட்டாலும் ரசிகர்களுக்கு மனப்பாடமாக இருக்கும் அளவுக்கு மாஸ் காட்டியிருந்தது. அந்த சமயத்தில் போலீசார் பலரும் சிங்கம் ஸ்டைல் மீசையை அதிகமாக வைக்க தொடங்கினார்கள். துரை சிங்கம் என்ற கேரக்டரில் போலீஸ் கெட்டப் எல்லாம் எனக்கு சர்வ சாதாரணம் என மிரட்டியிருந்தார் சூர்யா.
தூள் கிளப்பிய வசனங்கள்
படத்திற்கு பெரிய பலமாக வசனங்கள் அமைந்தது. ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்’, ‘சஸ்பெண்ட் பண்ணுவியா..டிஸ்மிஸ் பண்ணுவியா’ என நீளும் அந்த வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தின் சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்த பாகங்களுக்கும் வழி வகுத்தது. ஆனாலும் அவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். அதேபோல் கடந்த 13 ஆண்டுகளில் ஹரி 4 படங்களை இயக்கியிருந்தாலும், அவை எதுவும் சிங்கம் படத்திற்கு அருகில் கூட வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.