தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியான படம் கங்குவா. ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தை சிவா இயக்கியுள்ளார்.
கங்குவா கலெக்ஷன்ஸ்:
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படம் வெளியான தினத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. ஆனால், வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
கலவையான விமர்சனங்கள் படத்திற்கு வந்தாலும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 3 நாள் வசூல் ரூபாய் 127 கோடியே 64 லட்சம் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
1000 கோடி அவ்வளவுதான்:
படம் முதல் நாள் எதிர்பார்த்த அளவு வசூலை குவிக்காவிட்டாலும் வெள்ளி, சனிக்கிழமைகளில் வசூலை வாரிக்குவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வசூலையும் சேர்த்தால் படம் ரூபாய் 200 கோடி வரை வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா படம் 1000 கோடி ரூபாய் வரை வசூலை குவிக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய நிலையில், கலவையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு கங்குவா படம் திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடினால் மட்டுமே படம் பட்ஜெட்டை விட அதிக வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியது போல ரூபாய் படத்தின் ஓடிடி விற்பனை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை சேர்த்தாலும் 1000 கோடி வசூல் என்பது தற்போதைய நிலவரப்படி சாத்தியமே இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.