கருப்பு படம் வெற்றியின் காரணமான நடிகர் சூர்யாவின் சம்பளம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திரைத்துறையினர் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் கடந்த மே 15ம் தேதி வெளியான படம் “கருப்பு”. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் சொன்ன ரிலீஸ் தேதியில் இருந்து ஒருநாள் தாமதமாக வெளியானது. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஷிவதா, நட்டி, சுவாசிகா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கருப்பசாமியையும், சமூகத்தில் நடைபெற்ற பல உண்மை சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கருப்பு படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சரியான வெற்றி இல்லாமல் தவித்து வந்த சூர்யா ரசிகர்களுக்கு இப்படத்தின் ஹிட் மிகப்பெரிய மன நிம்மதியைக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் கிட்டதட்ட 21 ஆண்டுகளுக்குப் பின் சூர்யா ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.
இந்த நிலையில் கருப்பு படத்தின் வெற்றி சூர்யாவின் சம்பளத்தில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி சூர்யா தனது சம்பளத்தை ரூ.45 கோடியிலிருந்து ரூ.90 கோடியாக உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் கருப்பு படத்தில் நடிக்க அவர் குறைந்த சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தார் என்பதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார்.
காரணம் கருப்பு படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சூர்யாவின் உறவினர்களுடையது. இதனால் வழக்கத்தைக் காட்டிலும் தனது சம்பள விஷயத்தில் சூர்யா பெரிய மனதுடன் நடந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கருப்பு படம் முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது. அவரது கேரியரில் அதுவே கடைசிப்படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென அரசியலில் விஜய் தீவிரமாக செயல்பட்டதால் கருப்பு படத்தில் சூர்யா நடித்தார்.
இந்த நிலையில் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்காக சிஸ்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, அஷுதோஷ் கோவாரிகர் ஆகியோரும் இணைந்துள்ளனர். சூர்யா, ஜோதிகா இருவரும் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இயங்கி வருவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “தாங்கள் நட்சத்திர தம்பதிகளாக இருந்தாலும் தங்களுடைய அந்தஸ்தை வீட்டிற்குள் நுழையும்போது வாசலுக்கு வெளியே விட்டுவிடுகிறோம். நாங்கள் எங்கள் குழந்தைகளின் பெற்றோராக மட்டுமே வாழ்கிறோம். புகழை விட குடும்பத்திற்கே முன்னுரிமை கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
