`கௌதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம் ஆகிய இருவரில் எனக்குப் பிடித்தது மணிரத்னம்.. கௌதம் என்று சொன்னால் அவரே ஒப்புக்கொள்ள மாட்டார்’ என்று மனம் திறந்து செய்தித் தளம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ளார் நடிகர் சூர்யா. 


சமீபத்தில் தமிழ் செய்தித் தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசிய நடிகர் சூர்யா தனது கல்லூரிக் கால அனுபவங்கள் குறித்தும், தனது தொடக்க கால சினிமா பயணம் குறித்தும் பேசியுள்ளார். அதில் அவரிடம், `எத்திராஜ், பெண்கள் கிறித்துவக் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் - இவற்றில் எது பிடிக்கும்?’ எனக் கேட்ட போது `மூன்றுமே நல்ல கல்லூரிகள் தான்’ என நடிகர் சூர்யா மழுப்ப, தொகுப்பாளர் விடாமல் கேட்க, `ரெக்கார்ட் பண்றீங்களே’ என சிரித்தார் சூர்யா. தொடர்ந்து அவர், `எத்திராஜ் காலேஜ். அங்கே மில்கி வே என்று ஒரு ஐஸ்க்ரீம் கடை இருக்கும். அதனால் அது பிடிக்கும்’ என்று தன் பதிலுக்கு ஒரு காரணமும் கூறியுள்ளார். 



`டிசி காமிக்ஸ் பிடிக்குமா, மார்வெல் பிடிக்குமா?’ என்று சூர்யாவிடம் கேட்கப்பட்ட போது, `மார்வெல் என்று சொன்னால் என் மகன் என்னை உதைப்பான்.. அதனால் டிசி என்றே சொல்லி விடுகிறேன்’ என்று சிரித்தார். `கௌதம் மேனனா, மணிரத்னமா? யாரைப் பிடிக்கும் என்று கேட்கப்பட, `கௌதம் என்று சொன்னால் அவரே ஒப்புக்கொள்ள மாட்டார். அதனால் மணிரத்னம் என்று சொல்கிறேன். ஏனென்றால் என்னைத் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தியதும், எனக்கு `சூர்யா’ என்று பெயர் சூட்டியதும் மணிரத்னம் தான். லயோலா கல்லூரியில் நான் கல்வி பெற்று பலவற்றைக் கற்றுக் கொண்டது போல, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திலும் சினிமா தொடர்பாகக் கற்றுக் கொண்டேன்’ எனக் கூறினார்.


`இப்போது வரை நீங்கள் நடித்ததில் நீங்களே கொண்டாடிய கதாபாத்திரம் எது?’ என்று நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் `நான் கொஞ்சம் அமைதியான நபர் என்றே கருதுகிறேன். அப்படிப்பட்ட என்னை மாற்றியது `பிதாமகன்’. வழக்கமாக பாடல்களில் மட்டுமே நடனம் ஆடுவது, உரக்கப் பாடுவது முதலானவை இடம்பெறும். ஆனால் பாலா `பிதாமகன்’ படத்தில் என் கதாபாத்திரம் பற்றி கூறிய போது, அதில் ஒவ்வொரு சீனும் ஒரு பாடலைப் போன்றது எனக் கூறினார்., அதனால் `பிதாமகன்’ எனக்கு மிகவும் பிடித்தது’ எனக் கூறினார். 



`உங்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் பட்டப்பெயர் என்ன?’ என்று சூர்யாவிடம் கேட்ட போது சிரித்த அவர், `எனக்குப் பாட வராது.. அதனால் பாடலின் மெட்டுக்கேற்ப விசில் அடிப்பேன்.. பாடத் தெரியாவதவர்கள் என்றால் அப்படித்தான்.. விசிலடித்து சமாளிப்போம். அதனால் என்னை `பிகில்’ என்று அழைப்பார்கள்; சிலர் `விசில்’ என்று அழைப்பார்கள்’ என்றார். 


இந்தப் பேட்டியில் சென்னை லயோலா கல்லூரியில் தன்னுடைய நினைவுகளையும், தன் கல்லூரிக் காலம் குறித்த தனது தற்போதைய கருத்துகளையும் நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார்.