நடிகர் சூர்யா நடித்து வரும் 42வது படத்தின் டைட்டில் சொன்ன நேரத்துக்கு முன்பாக  யாரும் எதிர்பாராத வகையில் வெளியானதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் கடந்தாண்டு எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்குநர் பாலாவின் “வணங்கான்” படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் அப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். இதற்கிடையில் கிட்டதட்ட 2 ஆண்டுகளாக சூர்யா ரசிகர்களிடையே அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. 


அதனை உறுதிசெய்யும் வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சூர்யாவின் 42வது படத்தின் அறிவிப்பு வெளியானது. யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோவாக சூர்யா, ஹீரோயினாக திஷா பதானி நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு  இசையமைக்கிறார்.  3டி தொழில்நுட்பத்தில்  10 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக மோஷன் போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியிருந்தது. 


இதனிடையே சில தினங்களுக்கு முன்பு சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து  ”புகழ்ச்சிகளுக்கும், இடியின் சத்தங்களுக்கும் நடுவே போர் வீரன் நுழைகிறான்”  என்ற கேப்ஷனோடு புது போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.






இப்படியான நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள நாளிதழ்களில் சூர்யாவின் 42வது படத்தின் டைட்டில் குறித்த விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் இப்படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. சொன்ன நேரத்திற்கு முன்பாக படத்தின் டைட்டில் வெளியாகியிருந்தாலும், எதிர்பாரா வண்ணம் வெளியானது சூர்யா ரசிகர்களை சற்று ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


டைட்டில் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவானது கழுகு பறக்க, நாய் மற்றும் வீரர்களுடன் போருக்கு செல்லும் தலைவன் பின்னணியில்.. கங்குவா..கங்குவா என்ற பின்னணி இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.