நடிகர் சூர்யா நடித்து வரும் 42 வது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக மாறியுள்ள சிவா தான் சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி கடந்த 2 ஆண்டுகளாக பரவிய நிலையில் ஒரு வழியாக அது கடந்த மாதம் உறுதியானது. வரலாற்று பின்னணியில் உருவாவதாக சொல்லப்படும் இப்படத்தில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.பல வருடங்களுக்குப் பின் சூர்யா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
பட பூஜையை தொடர்ந்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இதன்பின்னர் அடுத்தக்கட்ட ஷெட்யூல்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்தப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முதல்முறையாக சூர்யா படம் இத்தனை மொழிகளில் வெளியாகவுள்ளது திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சூர்யா சமீபத்தில் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அவர் இந்தாண்டு ஹீரோவாக நடித்த எதற்கும் துணிந்தவன், கேமியோ ரோலில் நடித்த விக்ரம் ஆகிய படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ள அவர் அதற்கான காளை அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். இதேபோல் பாலாவின் வணங்கான் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். இதனால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.