புதிய மன்னர்கள் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் வீட்டு பணியாளர்களை வைத்து ரெக்கார்ட் செய்த தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


1994 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் அரசியல் களத்தை மையமாக வைத்து வெளியான படம் “புதிய மன்னர்கள்”. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். விக்ரம், மோகினி, பாபு கணேஷ், நளினி காந்த், விவேக், ஸ்ரீமன், தாமு, வினு சக்கரவர்த்தி என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்ற நிலையில், அதில் இடம்பெற்ற “நீ கட்டும் சேலை மடிப்பில் நான் கசங்கி போனேனே” பாடல் கிளாஸிக் ஹிட்டாக அமைந்தது.


ஆனால் புதிய மன்னர்கள் படத்தில் இடம் பெற்ற “வானில் ஏணி போட்டு” பாடல் உருவான விதம் மிக சுவாரஸ்யமானது. பழனி பாரதி எழுதிய அப்பாடலை மனோ பாடியிருந்தார். இந்த பாடலின்போது நடந்த சம்பவத்தை நடிகரும், புரொடக்‌ஷன் மேனேஜருமான சூப்பர்குட் லட்சுமணன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். 


அதாவது, புதிய மன்னர்கள் படத்தின் பாடல் பதிவின் போது விக்ரமனுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதில் இடம்பெற்ற  வானில் ஏணி போட்டு பாடலுக்கு ட்யூன் போட்டு காட்டினார். அந்த பாட்டில் கோரஸ் வேண்டும் என இயக்குநர் விக்ரமன் கேட்டார். உடனே ரஹ்மான், “சார் உங்க படங்களில் பாடல்களை நான் கேட்டிருக்கேன். நீங்கள் அதிகம் கோரஸ் உபயோகம் செய்கிறீர்கள். ஆனால் இந்த பாடல் அப்படி கிடையாது” என சொல்கிறார். ஆனால் விக்ரமன் எனக்கு கோரஸ் கண்டிப்பாக வேண்டும் என கேட்டு விட்டார். உடனே ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய உதவியாளரை அழைத்து கோரஸ் பாடுபவர்கள் ஒரு 10 பேரை வரச்சொல்லுங்க என சொன்னார். அதற்கு உதவியாளர், யாருமே இல்ல சார். எல்லாருமே பிஸியாக இருக்கிறார்கள் என தெரிவித்தார். சரி வீட்டுல யார் இருக்கா என கேட்டார். 2 பேர் தொழுகைக்கு வந்திருக்கிறார்கள். தோட்டக்காரன் இருக்கிறான் என சொல்லவும் எல்லாரையும் நிற்க வைத்து ரஹ்மான் பாடி காட்டினார். 


“யையையையே.. யையையையையே..
யையையையே.. யையையையையே..
யையே..யையே..யையையே..யே..யே..யே..யே.”


இந்த ஹம்மிங்கை பாடி காட்டவும் ஒரே டேக்கில் ரெக்கார்ட் செய்து அதை 4 இடங்களில் பிரித்து பாட்டை பதிவு செய்து விட்டார். நீங்கள் இன்றைக்கு பாட்டு கேட்டாலும் அந்த கோரஸ் சங்கீத ஞானம் இல்லாதவர்கள் பாடுனது தான்” என லட்சுமணன் கூறியுள்ளார். இந்த தகவல் ரஹ்மான் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.