நடிகர் ரஜினியின் படங்களை ரீமேக் செய்வதில் தமிழ் சினிமாவின் இயக்குனர்களுக்கு என்ன ஆர்வமோ தெரியவில்லை. படத்தை ரீமேக் என்கிற பெயரில் கொத்துக்கறி போட்டு ஒரிஜினல் படத்தின் மீதான மரியாதையும் கெடுத்து உண்மையில் ரசிகர்களை மனவேதனை அடைய செய்து விடுகிறார்கள். அதில் ஒன்று முரட்டுக்காளை படம்.
ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உயர்த்திய படம்
1980 ஆம் ஆண்டு கமர்சியல் இயக்குனர்களின் முன்னோடி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஜெய் சங்கர், நடிகைகள் ரதி,சுமலதா, தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன், சுருளிராஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஏவிஎம் நிறுவனத்துடன் நடிகர் ரஜினிகாந்த் இணைந்த முதல் படமும் இதுதான். இந்தப் படம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை ரஜினிக்கு உறுதி செய்த படங்களில் மிக முக்கியமான ஒன்று.
இந்த படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக நடித்திருந்தார். ரஜினிக்கு இணையாக அவருக்கு காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். பொதுவாக என் மனசு தங்கம்,இந்த பூவிலும் வாசம் உண்டு, மாமன் மச்சான் உள்ளிட்ட பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக அமைந்தது. படத்தின் இடம் பெற்ற ரயில் சண்டைக் காட்சி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதில் நடிகர் ரஜினிகாந்த் டூப் போடாமல் நடித்திருந்தார். இப்படி ஏராளமான சிறப்புகளைப் பெற்ற முரட்டுக்காளை படம் 2012 ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது.
சுந்தர்.சி நடித்த முரட்டுகாளை
கே.செல்வ பாரதி இயக்கிய இப்படத்தில் ரஜினி கேரக்டரில் சுந்தர் சி. ரதி கேரக்டரில் சினேகா, சுமலதா கேரக்டரில் சிந்து துலானி, ஜெய் சங்கர் கேரக்டரில் சுமன், சுருளிராஜன் கேரக்டரில் விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். திருநங்கை கேரக்டரில் நடித்திருந்த விவேக்கின் காமெடி கடும் சர்ச்சைகளை சந்தித்தது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். பொதுவாக என் மனசு தங்கம் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு ஷூட்டிங்கை தொடங்கிய இப்படம் 2012 ஆம் ஆண்டு தான் வெளியானது. இந்த படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைகிறது. பழைய பிளாக்பஸ்டர் படங்களை எப்படி எல்லாம் ரீமேக் செய்யக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என கடும் விமர்சனங்கள் இப்படத்திற்கு எழுந்தது.
மேலும் படிக்க: Rajinikanth Movies Remake : சூப்பர்ஹிட் முதல் முரட்டு ஃப்ளாப் வரை.. தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ரஜினிகாந்த் படங்கள்