சமீப காலமாக, திரையுலகை சேர்ந்த பலர் போதை மோகத்திற்கு அடிமையாகி வருவதாக வெளியாகும் தகவல்கள், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்னர் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல பாடகி பிறந்தநாள் பாட்டியில் போதை மருந்து பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். அதே போல் தற்போது நடிகர் ஸ்ரீகாந்தும் போதை மருந்து சர்ச்சையில் சிக்கி, அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் .
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில், நடந்த பிரச்சனை காரணமாக அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை சோதனை செய்து பார்த்தபோது. பிரதீப் என்பவர் இவருக்கு கொக்கேன் போதை மருந்தை சப்ளை செய்தது தெரியவந்தது. ஏற்கனவே பிரதீப் கைது செய்யப்பட்ட நிலையில், பிரசாந்திடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்த துவங்கினர்.
அப்போது தான் பிரசாந்த் நடிகர் ஸ்ரீகாந்துக்காக பிரதீப் என்பவரிடம் இருந்து, கொக்கேன் போதை மருந்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். ஸ்ரீகாந்த் போதை மருந்து பயன்படுத்தினாரா என்பதை உறுதி செய்ய, அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது .
இதை தொடர்ந்து நேற்றைய தினம், நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய நிலையில், அவருக்கு ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஸ்ரீகாந்த் இதுவரை ரூபாய் 4.72 லட்சம் ரூபாய்க்கு சுமார் 40 முறை போதை மருந்தை வாங்கியதை ஒப்புக்கொண்டார். அதே நேரம் தான் யாருக்கும் அதை விற்பனை செய்யவில்லை என்றும், தானே பயன்படுத்தியதாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
இதையடுத்து , தற்போது நடிகர் ஸ்ரீகாந்தை முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த முதல் வகுப்பு சிறையில் பல வசதிகளோடு தற்போது ராஜ மரியாதை ஸ்ரீகாந்துக்கு கொடுக்கப்படுவது பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது .
முதல் வகுப்பு சிறையில் கட்டில், தலையணை, தினமும் செய்திகளை தெரிந்து கொள்ள செய்தித்தாள்கள், மருத்துவ அவசர உதவிக்கு மருத்துவர்கள், வாரத்திற்கு இரண்டு நாட்கள் கறி - மீன் போன்ற அசைவ உணவுகள், தினமும் பழங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் முதல் வகுப்பு சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு ஒரு நாளைக்கு 207.89 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது.
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, தற்போது போதை மருந்து பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள மற்றொரு ஹீரோவான நடிகர் கிருஷ்ணாவிடமும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிரது. மேலும் திரைக்கு பின்னால் இருக்கும் பல பிரபலங்களின் போதை வாழ்க்கை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது .