நடிகர் ஶ்ரீ 

 விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் வழியாக கவனமீர்த்தவர் நடிகர் ஶ்ரீ. பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் , வில் அம்பு , இறுக பற்று ஆகிய படங்கள் இவருக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்று தந்தன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஶ்ரீ அந்த நிகழ்ச்சியை விட்டு நான்கு நாட்களில் வெளியேறினார். ஶ்ரீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. உடல் மெலிந்த நிலையில் நீண்ட தலைமுடியும் ஶ்ரீ வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது உடல் நலத்தைப் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் அவர் பாலின  மாற்று சிகிச்சை செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீ நிலமைக்கு யார் காரணம்

சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் ஶ்ரீக்கு இதுவரை பெரியளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தவிர அவர் நடித்த வில் அம்பு மற்றும் இறுக பற்று ஆகிய இரு படங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதே அவரது தற்போதைய  நிலைக்கு காரணம். ஶ்ரீ நடித்த இறுக பற்று திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்தது. இந்த தயாரிப்பு நிறுவனத்தை விமர்சித்து ஶ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்த இறுக பற்று படத்தில் நடித்ததற்கு அவமானப்படுகிறேன். நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உங்களால் நழுவிவிட முடிகிறது என்றால் நீங்கள் ரொம்ப சாமர்த்தியசாலிதான். என்னுடை சம்பளம் வந்துவிடும் என நானும் இத்தனை நாள் நம்பிக் கொண்டிருந்தேன். " என அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

 நடிகர் ஶ்ரீ தற்போது மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது அவர் மன நல சிகிச்சையில் இருந்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். ஶ்ரீயின் குடும்பத்தினர் அவரை மீட்டு கொண்டு வர போராடி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் ஶ்ரீக்கு சம்பளம் வழங்காத தயாரிப்பு நிறுவனம் மேல் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்ஸ் மத்தியில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது