சூரி
விடுதலை படத்திற்கு பின் நடிகர் சூரி (Actor Soori) கதாநாயகனாக நடித்துள்ள படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் மே 31ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் சூரி நாயகனாக தனது புது அவதாரத்தைப் பற்றியும், கருடன் படத்தைப் பற்றியும் நிறைய தகவல்களை ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பகிர்ந்து வருகிறார்.
கருடன் படம் பற்றி சூரி
கருடன் படத்தில் சொக்கன் என்கிற தனது கேரக்டரைப் பற்றி பேசிய சூரி “இப்படத்தில் நான் நடித்திருக்கும் சொக்கன் கதாபாத்திரம் நேர்மைக்கு விஸ்வாசத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒரு கதாபாத்திரம். இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது இரண்டு விதமான சூழ்நிலைகளை சொன்னார். இரண்டு சூழ்நிலைகளிலும் சொக்கன் கதாபாத்திரத்தை கேட்கும்போது எனக்கு அவன்மேல் பரிதாபமாக இருந்தது. சொக்கன் கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது அதனால் இந்தப் படம் எனக்கு சரியான படமாக இருக்கும் என்று நம்பிக்கை வந்தது. விடுதலை படம் என்னை நம்பி வந்த மக்களுக்கு நான் நடிகனாக நடிக்க தகுதியான ஆள் என்று நம்பிக்கை அளித்தது. மார்கெட்டில் என்னை நம்பி பணம் போட முடியுமா என்கிற நம்பிக்கையை கருடன் படம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று சூரி தெரிவித்துள்ளார்.
என் அப்பாவின் கதையை படமாக்க இருக்கிறேன்
காமெடியன் டூ நாயகனாக மாறிய சூரி, தான் அடுத்து படம் ஒன்றையும் இயக்கவிருப்பதாக ஒரு ஆச்சர்யத் தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது அப்பாவின் வாழ்க்கையை ஒரு முழு படமாக எடுக்க இருப்பதாகவும் அதற்கான திரைக்கதையை தான் தயார் செய்துவிட்டதாகவும் சூரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் 2 மணிநேரம் சொல்லி இருப்பதாக சூரி தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் இந்தக் கதையை படமாக எடுக்க இருப்பதாக எதிர்பார்க்கலாம்.
கொட்டுக்காளி
கருடன் படம் தவிர்த்து சூரி பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகை அனா பென் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே ப்ரோடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளதும். சர்வதேச திரைப்பட விழாக்களான ராட்டர்டாம் , பெர்லின் திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப் பட்டு பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.