வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் எப்போது வெளியாகும் என்பதை நடிகர் சூரி தெரிவித்துள்ளார். 


எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில்  உருவான படம் “விடுதலை”. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார். மேலும் வாத்தியார் எனப்படும் போராளி பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்தார். 


இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, சேத்தன்,  கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோர் விடுதலை படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்றனர். இளையராஜா இசையமைத்த விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். உலக அளவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் விடுதலை படம் மிகுந்த பாராட்டைப் பெற்ற நிலையில், இன்னும் கொஞ்சம் காட்சிகள் படமாக்க வேண்டி இருப்பதால் விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சூரி, “விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் மாதம் வெளியாகும் என நான் நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் ஷூட்டிங் இருக்கிறது. படம் பெரியதாக வந்து கொண்டிருக்கிறது. நிறைய பிரபலங்கள் விடுதலை படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, கிஷோர் என பலரும் நடித்துள்ளனர். விடுதலை முதல் பாகத்தை எப்படி தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் பிரமித்தார்களோ, அதைவிட 3 மடங்கு பிரமித்து போவார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 


மேலும், “நான் முதன்முறையாக விடுதலை படத்தை தியேட்டரில் பார்த்தபோது கொஞ்சம் பதட்டமாக தான் இருந்தது. ஏனென்றால் இந்த படம் எப்படி வரப்போகிறது, ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என தோன்றியது. நல்ல இயக்குநர் படத்தில் நடிக்கிறோம் என்பதால் படம் நிச்சயமாக நன்றாக வரும் என்ற ஒரு விஷயம் மட்டும் நான் நம்பினேன். மற்றபடி என்னை ஏற்றுக்கொள்வார்களா என தோன்றியது. மிகப்பெரிய வாய்ப்பை வெற்றிமாறன் கொடுத்துள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் கவனமாக நடித்தேன். எந்த சூழலிலும் முகத்தை சுழித்து விட கூடாதுன்னு தான் இருந்தேன். படம் ரிலீசான நாளில் கொஞ்ச நேரத்துக்கு ஒருமுறை போன் செய்து விசாரித்து கொண்டிருந்தேன். வழக்கமான சூரி திரையில் இல்லை என்றதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நம்பிக்கை கொடுத்தது. விடுதலை சூரி எங்க இருந்தான் என எனக்கே தெரியவில்லை” எனவும் சூரி கூறியுள்ளார்.