எங்க குடும்பத்தில் எல்லாரும் ஒற்றுமைக்கு காரணம் அம்மா தான் என நேர்காணலில் நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி:
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மூலம் ஹீரோவாக சினிமாவில் தனது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தார். தற்போது கருடன் என்ற படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கிய இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் மே 31 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகியுள்ளது.
அம்மாதான் காரணம்:
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சூரி, “எங்க குடும்பத்தில் எல்லாரும் ஒற்றுமைக்கு காரணம் அம்மா தான். அப்பா சமீபத்தில் தான் இறந்தார். அம்மா எங்களிடம் கேட்டது ஒன்று தான். நான் சாகும் வரை யாரும் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என சொன்னார். சண்டை வந்தாலும் பேசிக்கொள்ள வேண்டும் என சொல்லி விட்டார். 6 மருமகள்கள் இருந்தாலும் வீட்டில் எல்லா வேலையும் செய்வது அம்மா தான். என் வீட்டில் மொத்தம் குழந்தைகளோடு சேர்த்து 25 பேர் இருக்கிறார்கள்.
எங்கள் வீட்டில் யாரும் தனிக்குடித்தனம் போனதே இல்லை. நான் மட்டும் வேலைக்காக சென்னை வந்து இருக்கிறேன் அவ்வளவு தான். 6 பிள்ளைகள் தொழில் காரணமாக வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் அம்மாவின் ஆசைப்படி சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கு வந்து விடுவார்கள். எங்க வீட்டுக்கு குழந்தைகளுக்கு எல்லாருடைய பெயர் தான் தெரியும்.
பெரியப்பா, சித்தப்பா கிடையாது:
அதேபோல் பெரியப்பா, சித்தப்பா என்ற உறவு முறையே கிடையாது. எல்லாரையும் அப்பான்னு தான் கூப்பிடணும். அப்பாவை கூப்பிடுன்னு என சொன்னா எந்த அப்பான்னு தான் குழந்தைகள் கேட்பாங்க. பெயரை சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும். ஒன்றரை வயது முதல் 25 வயது வரையிலான குழந்தைகள் எங்க வீட்டில் இருக்கிறார்கள்” என சூரி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் சூரியின் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.
நடிகர் சூரி மதுரை மேலூர் அருகே உள்ள அவரது சொந்த கிராமமான ராஜாக்கூரில் பிரமாண்டமாக வீடு கட்டியுள்ளார். நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளுடன் இருக்கும் இந்த வீட்டில் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் சூரி உட்பட அவரது அண்ணன், தம்பியினர் 6 பேரும் வந்து விடுவார்களாம். மிகவும் ஒற்றுமையாக இருக்கும் சூரியின் குடும்பம் அந்த கிராமத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.