சூரி

விடுதலை படத்தைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக புதிய பரிமானம் எடுத்துள்ளார். விடுதலை 2 , கருடன் ,  தற்போது மாமன் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

மாமன்

பிரசாந்த் பாணியராஜ் இயக்கியுள்ள  இயக்கத்தில்  சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், மாஸ்டர். பிரகீத் சிவன், பால சரவணன், ஜெய பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி, நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மெல்வின், திருச்சி அனந்தி, சாவித்திரி, சாரதா, தமிழ் செல்வி, ரயில் ரவி, உமேஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ள படம் மாமன்.  இப்படத்தின் கதை சூரியின் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வொன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஹேஷம் அப்துல் வகப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மே 16 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்களுடன் படம் பார்த்த சூரி 

திருச்சியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இன்று சூரி திருச்சி சென்று திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து அவர்களுடன் கலந்து பேசினார். பின் பத்திரிகையாளரை சந்தித்த அவர் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் நடிப்பாரா சூரி 

பத்திரிகையாளர்களிடம் பேசிய சூரி " மாமன் நம் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வு போல இருக்கும் என முன்பே கூறியிருந்தோம். என்ன சொனோமோ அதுதான் நடந்திருக்கிறது, மக்கள் குடும்பமாக இந்த படத்தை பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லதான் இன்று இங்கு வந்திருக்கிறேன். மாமன் திரைப்படம் முதல் பாதி நகைச்சுவையாகவும் இரண்டாவது பாதி உணர்வுப் பூர்வமாகவும் இருக்கும் .இப்படத்தை மக்கள் தங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வோடு ஒப்பிட்டு பேசுவது தான் படத்தின் வெற்றி. என்னுடைய அடுத்த படம் ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்து இருக்கும் " என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிப்பது குறித்து இப்படி பேசினார்

" சிவகார்த்திகேயனோடு மறுபடியும் நகைச்சுவை ரோலில் நடிக்க அவரே என்னை அழைக்க மாட்டார். சரிசமமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே இருவரும் சேர்ந்து நடிக்கலாம் என சிவகார்த்திகேயன் என்னிடம் முன்பே தெரிவித்துவிட்டார்" என சூரி கூறினார்.