தென்னிந்திய சினிமாவில் ஒரு இயக்குநராக இருந்து பிரபல நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தவர் சமுத்திரக்கனி. தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது 'ராமம் ராகவம் ' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருப்பவர் தன்ராஜ். 


இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 



நல்ல நண்பர்கள் 


தந்தைக்கும் மகனுக்குமான உறவைப் பற்றி பேசும் இப்படத்தில் தந்தையாக சமுத்திரக்கனியும் மகனாக தன்ராஜூம் நடித்துள்ளனர். மேலும் ஹரிஷ் உத்தமன், சத்யா, சுனில், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ப்ருத்விராஜ், பிரமோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சூரி பேசுகையில் "வெண்ணிலா கபடிக் குழு படத்தில் பரோட்டா காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. அதே காமெடியை தெலுங்கு படத்தில் நான் செய்ததை விட சிறப்பாக அவர் செய்தது பயங்கரமான வெற்றியை பெற்றது.


அதற்கு பிறகு தன்ராஜ் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக உருவானார். அந்த சமயத்தில் எனக்கு போன் பண்ணி உங்களோட காமெடியை பண்ணது நான்தான் எனப் பேசினார். அதற்கு பிறகு என்னுடைய படம் வந்தால், எனக்கு போன் பண்ணி பேசுவார். எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. 


இயக்குநர்கள் பலரும் இன்று நடிகராக மாறிக்கொண்டு வரும்போது ஒரு காமெடி நடிகர் இயக்குநராக வந்திருப்பது பெரிய விஷயம். ஒரு ஹீரோ 50 படம் நடித்தார் என்றால் ஒரு காமெடி நடிகன் 150 படங்களில் நடித்து இருப்பார். அதனால் நிறைய இயக்குநர்களுடன் சேர்ந்து ஒர்க் பண்ண வாய்ப்பு கிடைத்து இருக்கும். அவர்கள் அனைவரிடத்திலும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டு இருப்போம். அது அனைத்தையும் இந்தப் படத்தில் நீங்கள் பதிவு செய்து இருப்பீர்கள் என நம்புகிறேன். 



அப்பா மகன் கான்செப்ட் :


பொதுவாகவே அப்பா - மகன் கான்செப்ட் எமோஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். அப்படி பதிவு செய்த படங்கள் இதுவரையில் தோற்றதே கிடையாது. உதாரணமாக அப்பா, முத்துக்கு முத்தாக, யாரடி நீ மோகினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா இப்படி ஏராளமான படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அப்பா - மகன் காம்பினேஷனை சரியாக செய்து விட்டால் படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். ஒரு படம் எடுப்பது கூட அவ்வளவு கஷ்டம் இல்லை. ஆனால் அப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நிச்சயம் இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.


வாய்ப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த என்னை ஊக்குவித்து நடிக்க வைத்தது சசிகுமாரும் சமுத்திரகனி அண்ணனும் தான். கனி அண்ணன் எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்ததை அப்படியே போய் அவரை மாதிரியே நடித்திருக்கிறேன். எப்போது தனக்கு கீழ் தனக்கு மேல் என்று யாரையும் கனி அண்ணன் நடத்தியது கிடையாது . நடிக்க முடியும் வாடா என்று எனக்கு எனர்ஜி கொடுத்தவர் அவர்தான். எந்த ஒரு படத்திற்கு கடுமையாக உழைக்கக் கூடிய அவரது உழைப்பு இந்தப் படத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன் “ என்று சூரி பேசினார்