பள்ளியில் குரூப் போட்டோ எடுக்க முடியாமல் போனதன் சோகமான கதையை மூத்த நடிகர் சிவகுமார் பகிர்ந்துள்ளார். 


சென்னையில் நேற்று (ஜூலை 16) சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44ம் ஆண்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்வு செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு தலா ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், தன்னுடைய பள்ளிக் கால வாழ்க்கையை பேசிய போது கண்கலங்கினார். 


அவர் தனது உரையில், “நான் பள்ளியில் படிக்கும் போது குரூப் போட்டோ எடுக்க வீட்டுல காசு குடுக்கவில்லை. நான் 4வது ரேங்க். முதல் 4 ரேங்க் எடுத்தவங்க வீட்டுல காசு கொடுக்கலைன்னா பார்த்துகோங்க. நாங்க போட்டோ எடுக்க எல்லாரும் தயாரான நேரத்துல வீட்டுக்கு கிளம்பிட்டோம். எங்களை தடுத்து நிறுத்தி என்ன பிரச்சினை என ஆசிரியர் கேட்டார். 


நாங்க காசு கொடுக்கலை என சொன்னோம். உடனே பரவாயில்லை. போட்டோவுக்கு வந்து நில்லுங்க என சொன்னார். ஆனால் தன்மானம் தடுத்து போட்டோ எடுக்காமலேயே வந்து விட்டோம். 40 ஆண்டுகளில் 192 படங்களில் நடித்துள்ளேன். கிட்டதட்ட 40 கோடி பிரேம்களில் என் முகம் உள்ளது.  ஆனால் அந்த ரூ.5க்கு க்ரூப் போட்டோ எடுக்க முடியாமல் போனது. யார் வீட்டிலேயாவது குரூப் போட்டோ பார்த்தால், இப்போது நினைத்தாலும் துக்கம் தொண்டையை அடைக்கும். 


அதானாலேயே நான் அந்த ஸ்கூல் பக்கம் போகாம இருந்தேன். கிட்டதட்ட 50 வருடங்களுக்குப் பின் 2007 ஆம் ஆண்டு தான் சென்றேன். விஜய் டிவியில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என தொடர் பண்ணினார்கள். என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார்கள். என் கூட படிச்ச உயிரோட இருக்குற பசங்க, பொண்ணுங்க, ஆசிரியர்கள் வைத்து அந்த குரூப் போட்டோவை எடுத்துட்டேன். 


ஒருநாள் மேற்கொண்டு படிக்க காசு இல்லை. யார் கொடுத்தாலும் அவங்களுக்கு அடிமையாக இருக்கலாம் என நினைத்தேன். அப்போது தான் ஒருவர் வந்து மாதம் ரூ.85 கொடுத்து உதவினார். நான் சீட்டு, கிளப், பாலியல் விடுதி என சென்றதில்லை. ஒரே நோக்கம் படிப்பு..படிப்பு..படிப்பு மட்டும் தான். ஒருவேளை நான் ஓவியராக இருந்திருந்தால் இன்றைக்கும் சொல்றேன் கண்டிப்பா கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன். 


திருவண்ணாமலை பக்கம் தாடியுடன் சாமியாராக இருந்திருப்பேன். ஆனால் காலத்தின் கோலம் சினிமாவுக்கு வந்து திருமணமாகி, குழந்தைகள் பெற்று அவர்கள் நல்லவர்களாக இருக்கப்போய் இந்த மேடையில் நிற்கிறேன். உங்கள் குழந்தைகள் சரியாக இருந்தால் தான் இரண்டாவது இன்னிங்ஸ் சரியாக இருக்கும். 


சூர்யா, கார்த்தி ஷூட்டிங் கிட்ட கூட போகமாட்டேன். சினிமாவுல நடிச்சது போதும்ன்னு இருக்கேன். நான் காபி, டீ குடிச்சி 65 வருஷம் ஆச்சு. யோகா பண்ணுங்க, 8 மணி நேர கட்டாய தூக்கம்,நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டால் அற்புதமான வாழ்க்கை அமையும்” என சிவகுமார் தெரிவித்தார்.