‘மாமனிதன்’ படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ துப்பாக்கி சத்தம், பன்ச் டயலாக், காதை  பிளக்கும் பின்னணி  இசை, அடிதடி ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் சிற்றூர்களில் சராசரி மனிதர்களுக்கு இடையில் உலா வந்த ஒரு அறியப்படாத மனிதனின் கதையை எதார்த்தமான காட்சிகளைக் கொண்டு திரைப்படமாக வடித்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.




ஒரு ஏமாற்றுபவன் அவனிடம் ஏமாந்த ஒருவன் இவர்களுக்கு இடையிலான போராட்டத்தில் உண்மையில் அவதிக்குள்ளாவது அவர்களின் குடும்பங்கள்தான் என்பதை காட்டியுள்ளார். தன் மகனிடம் ஏமாந்தவனிடம் தனது தங்க நகைகளை ஈடாக அளிக்கும் நியாய உணர்வு கொண்ட தாய்,  ஊரைவிட்டு ஓடிவிட்டவனின் குடும்பத்தை தனதாக ஏற்றுக்  காப்பாற்றும் கருணை உள்ளம் கொண்ட நண்பன் - இதுபோல மனதை நெருடும் கேரக்டர்களும் உண்டு. 


 






பண்ணைபுர கிராமத்து அழகு, அங்கிருந்து கேரளத்து புழை கரையோர அழகு, மேலும் அங்கிருந்து காசி நகர காவி உடைகளின் ஓங்காரம் என்று மூன்று பகுதிகளாக  கதை நகர்கிறது. இசைஞானியைக் கொண்டு கங்கா ஆர்த்தி பாடல் ஒன்றை கொடுத்திருக்கலாம். அது மிஸ்ஸிங்.காசியை அதன் தெய்வீகத்தோடு அணுகிய விதம் அங்கு நல்லிணக்க உணர்வை வளர்க்கும் விதத்தில் இஸ்லாமிய கதாபாத்தின் சித்தரிப்பு மனதில் இடம் பிடிக்கும் காட்சிகள்.


ஆட்டோவில் ஒரு மனிதர் தவறவிட்ட தங்க நகைகளை அந்த மனிதரை தேடிக்கண்டு பிடித்து ஒப்படைக்கும் போதே விஜய் சேதுபதி மாமனிதராகத்தான் அறிமுகம் ஆகிறார். சராசரி மனிதர்களை உற்று நோக்கினால் அவர்களுக்குள்ளும் ஒரு மாமனிதன் இருப்பான் என்பதே இந்த படத்தின் மெசேஜ் ஆக நான் பார்க்கிறேன். விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு ஏற்றுக் கொண்ட பாத்திரம் எதுவாயினும் அலட்டிக் கொள்ளாமல் அதன்  போக்கில் நடித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பது என்றாலும் இந்தப்படத்தில் மிகவும் கவனமாக அழுத்தமான நடிப்பை அவரிடம் பார்க்கிறோம்.மொத்தத்தில் மாமனிதனுக்கு  பாஸ் மார்க் மகிழ்ச்சியோடு கொடுக்கலாம்” என்று அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 


முன்னதாக, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய்சேதுபதி இணைந்த படம் 'மாமனிதன்'. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப்படத்திற்கு அவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர். ஆனால் சீனு ராமசாமிக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை முளைத்த நிலையில், நீண்ட நாட்களாக இந்தப்படம் கிடப்பிலேயே இருந்தது. 


அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மாமனிதன் படத்தை வாங்கி வெளியிட்டார். அப்படி இப்படியுமாக இந்தப்படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இந்தக்கூட்டணியில் வெளியான ‘தர்மதுரை’ படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில்,இந்தப்படத்தின் மீது அதே மாதிரியான எதிர்பார்ப்போடு ரசிகர்கள் வந்தனர். 


படம் யதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்த போதினும், கதையின் ப்ளாட் அதரபழையதாக இருந்த காரணத்தால்  படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. விளைவு படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள். அதனால் தியேட்டரில் படுதோல்வியை சந்தித்து ரேஸில் இருந்து வெளியேறியது மாமனிதன். அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூனின் ஆஹா ஓடிடி தளம் மாமனிதன் படத்தை வாங்கி தனது தளத்தில் வெளியிட்டது. தியேட்டரில் காலை வாரிய  ‘மாமனிதன்’ ஓடிடியில் சக்கை போடு போட்டது. தொடர் வரவேற்பால் குஷியான ஆஹா குழு  படத்தின் ஓடிடி வெற்றியை விழா எடுத்துக்கொண்டாடியது. தொடர்ந்து பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட  ‘மாமனிதன்’ அங்கும் பல விருதுகளை வென்று வருகிறது.