கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு இன்று வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயன் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் ரசிகர்களுடன் கைகுலுக்கி பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. அட்வான்ஸ்ட் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள அயலான் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் தமிழ் சினிமாவில் வெளியான எந்த ஒரு திரைப்படத்திற்கும் இந்த அளவு கிராபிக்ஸ் பயன்படுத்தப்படவில்லை என பிரிவியூ ஷோ பார்த்த பிரபலங்கள் கூறுகிறார்கள் என தகவல் வெளியாகியது. இந்த நிலையில் பொங்கல் ரிலீசாக கடந்த ஜனவரி 12ம் தேதி அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. குழந்தைகள் மற்றும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் அயலான் திரைப்படத்தின் வசூல் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
அயலான் திரைப்படம் தமிழகம் முழுவதும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஊராக நேரில் பட குழுவினருடன் சிவகார்த்திகேயன் பார்வையிட்டு வருகிறார். அதன்படி கோவை வந்த அவர், பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அந்த கோயிலில் சிவகார்த்திகேயன் வழிபாடு நடத்தினார். அப்போது அவருடன் பட குழுவினரும் கோயிலுக்கு வந்திருந்தனர். கோயிலில் வழிபட்ட பின்னர் வெளியில் வந்த அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். சிவகார்த்திகேயனை நேரில் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிவகார்த்திகேயன் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் சிவகார்த்திகேயனுடன் கைகுலுக்கி பொதுமக்கள் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் கார் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் திருப்பூர் புறப்பட்டு சென்றனர். இந்த காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.