அமரன் 


சிவகார்த்திகேய்ன நடித்த அமரன் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியானது . கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படத்தை இயக்கினார் ராஜ்குமார் பெரியசாமி. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் அவரது மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்திருந்தார். தமிழ் , தெலுங்கு, இந்தி , மலையாளம் என அமரன் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பெரியளவில் வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் 350 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அமரன் 100 ஆவது நாள் கொண்டாட்டம்


அமரன் திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படத்தின் 100 ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் , இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளம் குறித்து பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது


கொடுத்த சம்பளத்தை புடுங்கிட்டாங்க


" கமல் சார் எனக்கு சரியாக வந்திருச்சு சார். இப்படி நடப்பது எல்லாம் ரொம்ப அரிதான விஷயம். இது அன்பு அண்ணனுக்கு நிறைய தெரியும். என்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும் நான் அன்பு அண்ணன் ஆபிஸில் தான் உட்கார்ந்து கிடந்திருக்கிறேன். சம்பளம் கொடுக்காதது மட்டுமில்லை கொடுத்த சம்பளத்தை பிடுங்கிட்டு போற குரூப் தான் இங்க இருக்கு. நீங்க நிறைய பார்த்திருப்பீங்க. ஆனா எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசா இருக்கு, நான் படத்தில் நடிக்குற ஆறு மாதம் முன்னாடியே எனக்கு சம்பளம் வந்திருச்சு. அதோட எனக்கான மரியாதையையும் எனக்கு கொடுத்திருக்கீங்க" என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். 






சிவகார்த்திகேயனுக்கு ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் இடையில் பிரச்சனை இருந்தது. ஸ்டுடியோ கிரீன் சார்பாக அவருக்கு நிறைய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத் தக்கது.