பட்டத்து அரசன் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சிங்கம்புலி சொன்ன தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
லைகா நிறுவனம் அடுத்ததாக பட்டத்து அரசன் என்னும் படத்தை தயாரித்துள்ளது. களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை, சண்டி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சற்குணம் இப்படத்தை இயக்கியுள்ளது. இதில் நடிகர் ராஜ்கிரண் மற்றும் அதர்வா முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஹீரோயினாக ஹாசிக்கா ரங்கனா நடித்துள்ளார். கடந்த நவம்பர் 10 ஆம் தேதி இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள பட்டத்து அரசன் படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோவில் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் அதர்வா,ராஜ்கிரண், ஹாசிக்கா,சிங்கம்புலி,ஜெய பிரகாஷ், ஆர்.கே சுரேஷ் பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் சற்குணம், ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கபடி ஆடியதை நேரில் பார்த்ததும் அவர்களை தேடிச் சென்று இந்த கதையை உருவாக்கியதாகவும், பொத்தாரி என்ற ஒரு நிஜ மனிதரின் கேரக்டரில் ராஜ்கிரண் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய சிங்கம் புலி, கடுங்குளிரிலும் அயராது நடித்த ராஜ்கிரணின் உழைப்பை பாராட்டினார். அப்போது நேற்று கூட இரு காமெடி சம்பவம் நடந்தது.
தொடையை பார்த்து வந்த பாலா:
நேர்காணல் ஒன்றில் நீங்க நல்லா நடிக்கிறீங்க என ராஜ்கிரணிடம் பேசிய விஜய் டிவி பாலா, நல்லி எலும்பை நீங்க கடிக்கிறது எனக்கு பிடிக்கும் என சொல்ல இவரும் ஆமா என தெரிவித்தார். உடனே ஒரு 7 நல்லி எலும்பை கொண்டு வந்து இதை கடிங்க என சொன்னார். அவர் அதை தொட்டு பார்த்து நல்லா கட் பண்ணி கொடுங்க என தெரிவிக்க, இல்ல கடிக்கிற மாதிரி நடிச்சா போதும் என பாலா கூறினார்.
இதனையடுத்து நான் சினிமாவுக்கு நடிக்க வந்ததே ரம்பாவோட தொடையையும், நீங்க வேட்டிய மடிச்சி கட்டிட்டு தொடையை தட்டுற சீனுக்காக தான் என பாலா தெரிவிக்கிறார். உலகத்தில் எவ்வளவோ பேர் எத்தனையோ விஷயங்களை பார்த்து சினிமாவுக்கு வந்துருப்பாங்க. ஆனால் இவன் இப்படி சொன்னதும் நான் அவனை ஒரு போட்டோ எடுத்து வச்சிருக்கேன் என சொல்ல அரங்கில் சிரிப்பலை எழுந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.